![m](http://image.nakkheeran.in/cdn/farfuture/OrLYYftP4l-scJQPSrAQUWD-11TJvoXTyfaYRbHIJy0/1543838758/sites/default/files/inline-images/merina_3.jpg)
சென்னை மெரினா கடற்கரையில் போராட யாருக்கும் அனுமதி தரமுடியாது என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
விவசாயிகள் நல சங்க தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் இவ்வாறு தீர்ப்பு கூறியுள்ளது உச்சநீதிமன்றம்.
தமிழகத்தில் பாயும் முக்கிய நதிகளான காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தாமிரபரணி நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆகவே, அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, சென்னை மெரினா கடற்கரையில் காவிரி பிரச்சனைக்காக ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, தொடர்ந்து வழக்கை விசாரித்தனர். இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், மெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரியே என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.