Skip to main content
Breaking News
Breaking

“சென்னைக்கு விமான நிலையம் அவசியம்தான், ஆனால் காங்கிரஸ் இதை கூறவில்லை” - கே.எஸ் அழகிரி

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

congress tamilnadu leader ks alagiri talk about paranthur airport

 

இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமை நடை பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கான கலந்த ஆலோசனை கூட்டமானது திருச்சி மண்டல அளவில் நடைபெற்று வருகிறது.

 

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி, எம்பி திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பயணத்தில் எல்லோருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து மக்களின் பங்களிப்பாக உண்டியல் வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பேசுகையில், "ராகுல் காந்தியின் நடைபயணம் இனம், மொழி, ஜாதி என்று பிரித்து பார்க்காமல் மக்களின் நல்லிணக்கத்தை  மட்டுமே கருத்தில் கொண்டு இந்த நடை பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இப்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசு ஒவ்வொரு மக்களின் வங்கிக் கணக்கிலும் கருப்பு பணத்தை மீட்டு 15 லட்சம் பணம் போடுவதாக வாக்குறுதி அளித்தது. தவறான பொருளாதார கொள்கையால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி அதிகமாகியுள்ளது. மத்திய அரசு, பொதுமக்கள் எந்த உணவை உண்ண வேண்டும் என்பதையும், எதை உண்ணக்கூடாது என்பதையும் பட்டியல் செய்கிறது" என்று குற்றம்சாட்டினார்.

 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில்  இருந்தபோது மக்களுக்கு கொடுக்கப்பட்ட அரிசி 2 ரூபாய்க்கும், கோதுமை 1 ரூபாய்க்கும் விநியோகம் செய்தது. பாஜக அரசு அப்படிப்பட்ட அரிசி, கோதுமைக்கு 5% ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது கொடுமையானது. அதே போல் ரயில்வே கட்டணத்தில் ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 180 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய புல்லட் ரயில் உட்பட தமிழகத்திற்கு என்று எந்த ரயில்களும் கொடுக்கப்படவில்லை.

 

வருகிற 2047 இல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று மோடி கூறுகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த பதிலளித்த அவர், "தற்போதைய பொருளாதர நிலை மிகமோசமாக இருக்கும் நிலையில் வருகிற 2047 -ல் எப்படி வேண்டுமானாலும் பொருளாதாரம் இருக்கலாம். ஆனால் தற்போது பொதுமக்கள் வாழ்க்கை தரத்திற்க்கு  ஏற்றவாறு பொருளாதாரத்தை கொடுப்பதுதான் மத்திய அரசின் கடமை" எனப் பதிலளித்தார். 

 

குலாம் நபி ஆசாத் இருந்து வெளியேறும் போது ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சிக்கு சரியான தலைவர் இல்லை என்று சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, "எப்போதும் ஒருவர் கட்சியிலிருந்து வெளியேறும் போது விஷத்தை கக்கிவிட்டு தான் செல்வார்கள் அதுபோலத்தான் இதுவும் ஒன்று" என்றார்.

 

மேலும், ராகுல் காந்தியின் நடைபயணம் கன்னியாகுமரியில் இருந்து துவங்குவது எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது. கடைக்கோடியிலிருந்து ஆரம்பிப்பதுதான் முறையானது. இலங்கையில் இருந்தோ, வங்காளதேசத்தில் இருந்தோ ஆரம்பிக்க முடியாது. அதேபோல் ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனென்றால் மோடி பாஜகவின் தலைவர் இல்லை. அதேபோல் காந்தியும் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக இருந்தது இல்லை. ஆனால் அவர் காங்கிரஸ் கட்சிக்கு உறுதுணையாக இருந்து வழிநடத்தினார். அதே போல் காங்கிரஸ் கட்சியில் தலைவராக வருவாரா, வர மாட்டாரா என்ற விவாதம் தேவையில்லை" என்றார்.

 

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், துப்பாக்கியால் சுட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசு அவர்களுக்கு உத்தரவிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக பள்ளி பாடத்திட்டத்தில் சாவர்க்கர் புல் பறவையின் மீது பறந்து சென்று இந்தியாவை பார்த்தார் என்று உள்ளதே என்ற கேள்விக்கு, தினத்தந்தி பத்திரிகையில் வரும் சிந்துபாத் கதையை படித்து விட்டு எழுதி இருப்பார்கள் என்று கிண்டலடித்தார். அதேபோல் விவசாயிகளுக்கு என்று கொண்டு வந்த காப்பீடு திட்டம் என்பது படு தோல்வியை சந்தித்துள்ளது. பணக்கார விவசாயிளுக்கு மட்டுமே இந்த காப்பீடு செல்கிறது. அதிலும் குறிப்பிட சில மாநிலங்களுக்கு மட்டுமே சென்றடைகிறது. ஏழை விவசாயிகள் இந்த காப்பீடு திட்டம் சென்றடையவில்லை. திமுக ஆட்சி செய்து வரும் இந்த ஆண்டு வரை அவர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்கள்" எனத் தெரிவித்தார். 

 

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்குமா என்ற கேள்விக்கு, "சென்னைக்கு விமான நிலையம் அவசியம் தான். ஆனால் அது பரந்தூரில் தான் வரவேண்டும் என்பதை காங்கிரஸ் கூறவில்லை. நிலம் கையகப்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும். சிறு சிறு குறைகள் இருந்தாலும் சுட்டிகாட்டி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்