தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன. தற்போதைய நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கியது. அதேபோல், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகளையும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகளையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.க. ஒதுக்கியிருந்தது.
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., பா.ஜ.க., த.மா.கா., உள்ளிட்ட கட்சிகளும், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதுவரை தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யாமல் உள்ளன. இந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் முதற்கட்டப் பட்டியலைக் கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர்களின் பெயர்களும், போட்டியிட உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள தே.மு.தி.க. அக்கட்சியுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ், இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், தங்களுக்கு 20-க்கும் அதிகமான சட்டமன்றத் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை சீட்டையும் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. தரப்பிடம் கேட்டுக்கொண்டது. ஆனால் அ.தி.மு.க. தரப்போ, 15 சட்டமன்றத் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை பதவியையும் தருவதாகவும், தொகுதிப் பங்கீட்டு உடன்பாட்டில் கையெழுத்திட வருமாறு தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுத்தது. இதனை தே.மு.தி.க. ஏற்கவில்லை. இதன் காரணமாக தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கிறது.
அ.தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் துணைச் செயலாளர் பார்த்தசாரதி, "அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட 25 தொகுதிகள் வரை கேட்டுள்ளோம். நாங்கள் மாநிலங்களவை எம்.பி. சீட் கேட்டோம், அ.தி.மு.க.வும் தர ஒப்புக்கொண்டுள்ளது. தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம். அ.தி.மு.க.வைத் தவிர வேறு யாருடனும் தே.மு.தி.க. பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அ.தி.மு.க.வுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.