அதிமுகவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு 7 + 1 சீட் வாங்கியுள்ளது பாமக தரப்பில் பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் உள்பட அமைச்சர்கள் எல்லோருக்கும் தடபுடலாக விருந்து வைக்க ஏற்பாடு செய்து வருகிறார் ராமதாஸ். அந்த விருந்தில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் உள்பட அமைச்சர்கள் எல்லோரும் கலந்து கொள்கிறார்கள்.
![Ramadoss](http://image.nakkheeran.in/cdn/farfuture/StyIafnE8FEwNWRzLKOR4Hc--3_-s-H4_k8475pE1RE/1550761790/sites/default/files/inline-images/Ramadoss%2066.jpg)
2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார் ராமதாஸ். அப்போது பாமகவுக்கு தமிழ்நாட்டில் 28 தொகுதிகளும், பாண்டிச்சேரியில் 15 தொகுதிகளும் கொடுத்திருந்தார் ஜெயலலிதா. பாண்டிச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் அதிமுக 15 தொகுதிகளிலும், பாமக 15 தொகுதிகளிலும் போட்டியிட்டது. இந்தக் கூட்டணி வெற்றி பெற்றால், அதிமுக இரண்டரை வருடம் ஆட்சி செய்வது என்றும், பாமக இரண்டரை வருடம் ஆட்சி செய்வது என்றும் பொது ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர்.
பாண்டிச்சேரியில் ஜெயலலிதா ஒரு இடத்திலும், ராமதாஸ் ஒரு இடத்திலும் பிரச்சாரம் செய்தனர். பாண்டிச்சேரியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திண்டிவனம் வழியாக சென்னை செல்வதாக இருந்தார் ஜெயலலிதா. அப்போது மதியம் தைலாபுரம் தோட்டத்தில் விருந்து கொடுக்க ஏற்பாடு செய்தார் ராமதாஸ். அதற்கு ஜெயலலிதா ஒப்புக்கொண்டார். ஆனால் பாண்டிச்சேரியில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, அங்கு பாமகவுக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்பதை தெரிந்து கொண்டதோடு, நம்மை ஏமாற்றி 15 தொகுதிகளை வாங்கிக்கொண்டார்களே என்று கோபமடைந்தார்.
ஜெயலலிதா வருகிறார் என்று பாண்டிச்சேரி - திண்டிவனம் மெயின்ரோட்டில் காத்திருந்தார் ராமதாஸ். ஆனால் ஜெயலலிதா வந்த கார் ராமதாஸை பார்த்தும் நிற்காமல் பறந்தது. இந்த விருந்தை புறக்கணித்து ராமதாஸ்க்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துவிட்டு சென்றார் ஜெயலலிதா.
இன்று அதேபோல் அதிமுக தலைவர்களுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்கிறார் ராமதாஸ். அவர்களும் கலந்துகொள்வதாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில், ''பாமகவை ஜெயலலிதா எந்த வகையில் எல்லாம் புறக்கணித்தாரோ, அதையெல்லாம் விட்டுவிட்டு, ஜெயலலிதா விரும்பாததையும் புறக்கணித்தையும் எடப்பாடி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் மகிழ்ச்சியுடன் செய்யத் துணிகிறார்கள்" என்று ஆதங்கப்படுகிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.