இந்தியாவில் ஏற்கனவே கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு பரவலாக செலுத்தப்பட்டு வருகிறது. இத்தடுப்பூசிகளை தவிர ஸ்புட்னிக் v, மாடர்னா, ஜான்சன்&ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கும் இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றுள் ஸ்புட்னிக் v தடுப்பூசியின் சோதனை ரீதியிலான விநியோகம் நடைபெற்று வருகிறது. விரைவில் வர்த்தக ரீதியிலான விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பனேசியா பயோடெக் நிறுவனம், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒற்றை டோஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட்டை தயாரித்துள்ளது. இந்தநிலையில் அத்தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி கோரி பனேசியா பயோடெக் நிறுவனம் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்துள்ளதாகவும், அதற்கு விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவசரகால அனுமதி கிடைத்ததும், செப்டம்பர் மாதத்திலிருந்து ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்படுவது தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒற்றை டோஸ் தடுப்பூசியின் விலை 750 ரூபாயாக இருக்கும் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.