![vijay](http://image.nakkheeran.in/cdn/farfuture/G176S-e6g0mmLi3cqUt7_sUwz8MRmcMOdprKNbiQse0/1607410555/sites/default/files/inline-images/6_38.jpg)
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படம் தற்போது வெளியீட்டிற்காகத் தயாராக உள்ளது. இந்தப்படத்தின் படப்பிடிப்பானது சென்னை, நெய்வேலி, டெல்லி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. நெய்வேலியில் இப்படத்தின் படப்பிடிப்பில் விஜய் இருந்த போது, அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதற்காக நெய்வேலியிலிருந்து விஜய் சென்னை அழைத்துவரப்பட்டார். அடுத்த சில நாட்களுக்கு இது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனையடுத்து, மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய், அங்கே திரண்டிருந்த தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
அங்கே நின்று கொண்டிருந்த வாகனம் ஒன்றின் மீது ஏறி நின்று எடுத்த அந்த செல்ஃபியை, விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த சமயத்தில் இந்தப்பதிவு வைரலானது. இந்த நிலையில், இந்த வருடத்தில் அதிக ட்விட்டர்வாசிகளால் ரீட்விட் செய்யப்பட்ட பதிவு என்ற சாதனையை இந்தப் பதிவு பெற்றுள்ளது. இத்தகவலை இந்தியாவிற்கான ட்விட்டர் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ பக்கம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்த தகவலால் உற்சாகமான விஜய் ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.