![Sandy](http://image.nakkheeran.in/cdn/farfuture/Y72lJMTIkYGCmRUNXmcbhVPyO7r-4GOyjP1zd7DxyFc/1634042966/sites/default/files/inline-images/77_39.jpg)
டி. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் சாண்டி நாயகனாக நடிக்க, நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ள படம் 3.33. காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மையமாகக் கொண்டு வித்தியாசமான கதைக் களத்தில், பாடல்கள் இல்லாத, புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. பிரபல நடன இயக்குநரான சாண்டி, இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் அக்டோபர் 21ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/bd1W-Y4fyAzoy_9K8BCdM2ZiC6WafYMEtonLsxFNRkQ/1634043133/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_1.jpg)
அந்த சந்திப்பில் நாயகன் சாண்டி பேசுகையில், "3:33 நாயகனாக எனது முதல் படம். பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகு நிறைய கதை கேட்டேன். ஏதாவது சீரியஸாக பண்ணலாமே என யோசித்துக் கொண்டிருந்த போது, சந்துரு கதை சொல்கிறேன் என்றார். அவர் கதை சொல்லும் போது, அந்த இடத்தையே ரணகளமாக்கி, நடித்து, கதை சொன்னார். இந்தக் கதைக்கு நான் தாங்குவேனா என நினைத்தேன். ஆனால் நான் தான் வேணும் என்றார் சந்துரு. இந்தப்படத்தின் உண்மையான நாயகன் சந்துருதான். இந்தப் படத்தில் சூப்பராக வேலை வாங்கினார். அவர் நடித்து காட்டியதில் 50 சதவீதம்தான் நான் செய்துள்ளேன். அவருக்குள் ஒரு நடிகரும் இருக்கிறார். நான் நடிக்கிறேன் என சொல்லும் போது, நிறைய பேர் வேண்டாம் என்றார்கள். நீங்கள் கோரியோகிராபி மட்டும் செய்யுங்கள் என்றார்கள். ஆனால் எனக்கு பிரபு மாஸ்டர், லாரன்ஸ் மாஸ்டர் போல் வர வேண்டும் என்பது தான் ஆசை. படம் ஒரு வீட்டிற்குள்ளேயே வைத்து அருமையாக எடுத்து விட்டார்கள். தயாரிப்பாளருக்கு இப்படம் பெரிய லாபத்தை சம்பாதித்து தரும். இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் மிக அற்புதமாக இசையமைத்துள்ளார். பத்திரிக்கையாளர்கள்தான் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் " எனக் கூறினார்.