ரூ.263 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் இடிந்து விழுந்துள்ள சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.
பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்ச், மற்றும் கிழக்கு சம்பரன் மாவட்டங்களுக்கு இடையிலான 45 கிலோமீட்டர் தூர பயணத்தை குறைக்கும் வகையில் கந்தக் ஆற்றின் குறுக்கே 1.4 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் ஒன்று கட்டப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த நிதிஷ்குமார் இந்த பாலத்தின் கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கிவைத்தார். கிட்டதட்ட எட்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்த பாலத்தின் கட்டுமான பணிகளுக்காக, சுமார் 263.47 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த பாலத்தைக் கடந்த ஜூன் 16 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார் நிதிஷ்குமார்.
இந்நிலையில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டு ஒரு மாதம்கூட ஆகாத சூழலில், இந்த பாலத்தின் இணைப்பு சாலை நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. தரமற்ற கட்டுமான பொருட்களுடன் இதனைக் கட்டுவதற்கு அனுமதித்த ஆளும்கட்சியின் ஊழல் போக்கே இதற்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.