
பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டிற்குச் சென்றதால் தன்னுடைய குழந்தையை நான்கு துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், சிதாபூர் பகுதியைச் சேர்ந்தவர் மோஹித் மிஸ்ரா (40). இவருக்கு திருமணமாகி 5 வயதில் மகள் இருந்தார். இந்த நிலையில், தன்னுடைய மகள் காணாமல் போனதாக மோஹித் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர். தேடுதலின் போது, குழந்தை வெட்டப்பட்டு நிலையில் துண்டு துண்டாக போலீஸ் கண்டுபிடித்தனர். குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதற்கிடையில், குழந்தையின் தந்தை மோஹித் தன்னுடைய செல்போனை மனைவியிடம் கொடுத்துவிட்டு தலைமறைவானார். அதன் பின்னர், குழந்தையின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதற்குள், தலைமறைவாக இருந்த மோஹித்தை கண்டுபிடித்து விசாரித்ததில், குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மோஹித் குடும்பமும், பக்கத்து வீட்டுக்காரரான ராமு என்பவரின் குடும்பமும் ஆரம்பக் காலகட்டத்தில் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். இருவரது குடும்பங்களும் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இரண்டு குடும்பங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டனர். ஆனால், மோஹித்தின் குழந்தை மட்டும் ராமுவின் வீட்டிற்குச் சென்று விளையாடி வந்துள்ளார். இதனால், தனது மகளை மோஹித் பலமுறை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று, தன்னுடைய குழந்தை ராமுவின் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்ததை மோஹித் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோஹித், தனது குழந்தையை தன்னுடைய பைக்கில் ஏற்றிக் கொண்டு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தையின் துணியை வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அதன் பிறகு, தன்னுடைய குழந்தையை 4 துண்டுகளாக வெட்டி வீசிவிட்டு வந்துள்ளார் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தது.