Skip to main content

“சாமி...” - அடுக்கு மொழியில் இளையராஜாவுக்கு ரஜினி வாழ்த்து

Published on 08/03/2025 | Edited on 08/03/2025
rajinikanth wishes ilaiyaraaja for his symphony live concert

இசைஞானி இளையராஜா, ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் தான் உருவாக்கிய முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் இன்று (08.03.2025) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி தொடர்பாக கடந்த சில தினங்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன், வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி., தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர். மேலும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி உள்ளிட்ட சில அரசியல் கட்சி தலைவர்கள் எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர். 

அதே போல் திரைப்பிரபலங்களில் சிவகார்த்திகேயன் நேரில் சென்று வாழ்த்தினார். மேலும் கமல் உள்ளிட்ட பலர் தங்களது எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக இளையராஜாவை வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி  படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘இன்க்ரிடபிள் இளையராஜா’(#IncredibleIlaiyaraaja) என்ற ஹேஷ் டேக்கையும் இணைத்துள்ளார்.  

இளையராஜா லண்டன் புறப்படுவதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பேசியபோது, “இன்க்ரிடபிள் இந்தியாவைப் போல் இது இன்க்ரிடபிள் இளையராஜா” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா மற்றும் ரஜினியும் ஒரு மேடையில் சாமி, சாமி என்று ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அன்போடு நகைச்சுவையாக அழைத்துப் பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.

சார்ந்த செய்திகள்