
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு அரசியல் பயணமாக சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர், “நாங்கள் இங்கு ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகின்றன. நான் இங்கு வரும்போதெல்லாம், 2007, 2012, 2017, 2022, 2027 சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து விவாதங்கள் நடக்கும். ஆனால் கேள்வி, தேர்தல்கள் பற்றியது அல்ல. நாம் நமதுபொறுப்புகளை நிறைவேற்றும் வரை குஜராத் மக்கள் நம்மை தேர்தலில் வெற்றி பெறச் செய்ய மாட்டார்கள். நாங்கள் எங்கள் பொறுப்புகளை நிறைவேற்றும் வரை குஜராத் மக்களிடம் நம்மை ஆட்சிக்குக் கொண்டுவரச் சொல்லக்கூடக் கூடாது. நாங்கள் இதைச் செய்யும் நாளில், குஜராத் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தங்கள் ஆதரவை வழங்குவார்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர்களை எதிர்கொண்டிருந்த போது, நாம் பல இடங்களிலும் தலைவர்களை தேடிக் கொண்டிருந்தோம். ஆங்கிலேயர்கள் எங்கள் முன்று இருந்தனர். காங்கிரஸ் கட்சி இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியது, ஆனால், நம்மிடம் எந்த தலைவரும் இல்லை. அந்த தலைவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த மகாத்மா காந்தியை யார் நம்மிடம் கொடுத்தது? தென் ஆப்பிரிக்கா கொடுக்கவில்லை. குஜராத் மாநிலம் காங்கிரஸ் கட்சிக்கு உண்மையான தலைவரை கொடுத்தது. அந்தத் தலைமை நமக்கு சிந்திக்க வழியையும், போராட வழியையும், வாழ வழியையும் கொடுத்தது. மகாத்மா காந்தி இல்லாமல், காங்கிரஸ் கட்சி இந்த நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்திருக்காது. குஜராத் இல்லையென்றால், காந்தியும் அங்கு இருந்திருக்க மாட்டார்.
காங்கிரஸ் கட்சிக்கு, குஜராத் மாநிலத்தில் இருந்து 5 மிகப்பெரிய தலைவர்களை கொடுத்துள்ளது. குஜராத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. குஜராத் முன்னேற நினைக்கிறது. குஜராத்தின் காங்கிரஸ் கட்சியால் அதற்கு வழி கொடுக்க முடியவில்லை. இதை நான் அவமானத்தோடு பேசவில்லை, பயத்தோடு பேசவில்லை. நமது தொண்டர்களாக இருந்தாலும் சரி, ராகுல் காந்தியாக இருந்தாலும் சரி, நமது பொதுச் செயலாளராக இருந்தாலும் சரி, நமது மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் சரி, குஜராத்துக்கு வழி காட்ட முடியவில்லை என்பதை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். கடந்த 30 ஆண்டுகளாக குஜராத் எங்களிடமிருந்து, என்னிடமிருந்து, எங்கள் மாநில காங்கிரஸ் தலைவரிடமிருந்து, எங்கள் பொறுப்பாளரிடமிருந்து எதிர்பார்த்த அனைத்தையும் இன்றுவரை நிறைவேற்ற முடியவில்லை. நான் குஜராத்தை புரிந்துகொள்ள விரும்புகிறேன். குஜராத் மக்களிடம் இருந்து நான் நல்ல உறவை உருவாக்க நினைக்கிறேன். நம்பிக்கை உங்களிடம் இருக்கிறது, அதை வெளிக்கொண்டு வருவதே என்னுடைய வேலை” என்று பேசினார்.