
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து விமர்சித்து வருகிறார். சமூகத்தின் பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனம் வந்து கொண்டிருந்தாலும் அவர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதாய் இல்லை. இது குறித்து மதிமுக பொருளாளர் செந்திலதிபன் அவர்களை சந்தித்தோம். நம்முடைய பல்வேறு கேள்விகளுக்கு தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்தார்.
ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவை எதிர்த்து எந்த பிரதான பெரிய கட்சிகளும் போட்டியிடாததால் தாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற வாய்ச்சவடால் விட்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். எப்போதும் போல ஈரோட்டு மண்ணிலேயே பெரியாரை எதிர்த்து கடுமையான பேசினார். நாம் தமிழர் கட்சியை மக்கள் எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பதை மக்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் பதில் சொல்லி இருக்கிறார்கள். டெபாசிட்டை பறி கொடுத்திருக்கிறார்.
திமுகவின் எதிரணியில் இருக்கிற எந்த கட்சியும் போட்டியிடாத போதும் கூட 25ஆயிரம் ஓட்டு வாங்க முடியாத அளவிற்குத் தான் அந்த கட்சியும் பலம் உள்ளது.ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தொங்கு சதையாக பாஜகவைப் போலத்தான் நாம் தமிழர் கட்சியும் என்று தொடர்ச்சியாக நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
பாஜகவைச் சேர்ந்த தமிழிசை செளந்தர்ராஜன், ஹெ.ராஜா போன்றோர் சீமானின் வார்த்தைகளுக்கு மறைமுகமாக ஆதரித்து வந்தார்கள். ஆடிட்டர் குருமூர்த்தி தான் இதை துவங்கி வைத்தவர். அவர் தான் சீமானை இயக்குகிறார். இதற்கு ஆதராமே துக்ளக் பத்திரிகையின் நிகழ்வில் சீமானின் கருத்தை ஆதரித்து, பாராட்டி ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார். உன் நண்பன் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன் என்பதற்கு எடுத்துக்காட்டாய்த் தான் இதை பார்க்க வேண்டும்.
பெரியாரை முன் வைத்துத் தான் நான் தமிழ்தேசியத்தையே முன் வைத்தேன் என்றவர் இப்போது மாற்றி பேசுகிறார். 2008-ல் பிரபாகரனைப் பார்த்து வந்தவர், 2025-ல் ஏன் திராவிடர் கட்சிகளின் மீதும், பெரியாரின் மீதும் விமர்சனத்தை வைக்கிறார் என்ற கேள்வியை கேட்க வேண்டியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை தன்னுடைய கட்சி அலுவலகத்தில் பெரியார் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை கொண்டாடியிருக்கிறார். இப்போது மாற்றிப் பேச வேண்டிய காரணம் என்ன என்று கேட்க வேண்டியுள்ளது.
பிரபாகரன் தமிழ்நாட்டு அரசியலின் மீது விமர்சனத்தை ஒரு போதும் வைத்ததில்லை. அது குறித்து பேசியதும் இல்லை. பிரபாகரனுக்கே அரசியல் ஆலோசனை சொல்கிற ஆண்டன் பாலசிங்கம் திராவிடக்கட்சிகள் தான் தங்களுடைய போராட்டத்திற்கு உந்து சக்தி என்று சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டு அரசியலில் கலைஞர் ஆண்ட போதும், எம்.ஜி.ஆர் ஆண்ட போதும் ஒரு போதும் பிரபாகரன் அதில் தலையிட்டதுமில்லை விமர்சனமோ கருத்தோ சொல்லியதில்லை.
பிரபாகரனே வந்து சொன்னாலும் பெரியாரை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறவரை நமது மக்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும் புரிந்து கொள்வார்கள். தமிழ்நாட்டில் தமிழ் தேசிய அரசியலுக்கு விதை போட்டதே திராவிடக்கட்சிகளும் தந்தை பெரியார் தான் என்பதே தெரியாமல் இவர் உளறிக்கொண்டிருக்கிறார்.
தமிழர்கள் தாக்கப்பட்ட போதும் கூட இலங்கையில் போராட்டத்தை நிதானமாகவே அணுகி போரை வழிநடத்தினார் பிரபாகரன். ஆனால் இவர் நிதானமானதொரு அரசியலை தமிழகத்தில் முன்னெடுக்கவில்லை. பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறார். இவரை வழிநடத்துவது நாக்பூர் தான் தலைமையாக உள்ளது.