நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 17- வது மக்களவையின் சபாநாயகராக ஓம்.பிர்லா சமீபத்தில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் மக்களவை துணை சபாநாயகர் பதவியை காங்கிரஸ் கட்சி ஏற்க மறுத்ததால், ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையின் துணை சபாநாயகர் பதவியை வழங்க பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இது வரை துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த வாரம் டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் தனது கட்சி உறுப்பினருக்கு மக்களவை துணை சபாநாயகர் பதவி வேண்டாம் என்றும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து மட்டுமே வேண்டும் என அழுத்தமாக மத்திய அமைச்சர்களிடம் தெரிவித்தாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் இறுதி முடிவுக்காக பாஜக கட்சி மக்களவை துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் உள்ளது. ஆந்திர மாநில முதல்வருடன் தொடர்ந்து பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.
பாஜகவிற்கு மக்களவையில் அதிக பெரும்பான்மை இருந்தும், மாநிலங்களவையில் பாஜகவிற்கு போதிய அளவு பெரும்பான்மை இல்லை. இதனால் மாநிலங்களவையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பாஜகவிற்கு தேவைப்படும். இந்நிலையில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வழங்கும் வரை பாஜக கட்சியில் இருந்து விலகி இருக்க முதல்வர் ஜெகன்மோகன் முடிவு செய்துள்ளார். மக்களவையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியிக்கு மட்டும் மொத்தம் 22 உறுப்பினர்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.