
உலகம் முழுவதும் இன்று (08-03-25) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஐஆர்டி பொறியியல் கல்லூரியில் தமிழக அரசு சார்பில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கலந்துகொண்டு, ரூ.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சுமார் 10,000 மகளிருக்கு வழங்கினார்.
அதன் பின்னர், அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக இருக்கிறது என்று த.வெ.க தலைவர் விஜய் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, “விஜய் கருத்து தவறானது. 2021இல் மக்கள் நம்பிக்கையோடு தி.மு.கவுக்கு வாக்களித்தனர். அவர்கள் நம்பிக்கை காக்கும் விதத்தில் தி.மு.க அரசு பல்வேறு திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுகிறது. தற்போது கூட காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எனவே 2021 தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் தி.மு.கவுக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. இது மக்களின் நம்பிக்கை ஆட்சிக்கு உள்ளது என்பதை காட்டுகிறது. பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். பாலியல் தொல்லைகள் குறித்த வழக்குகள் அதிகரித்து வருவது அரசு அத்தவறுகள் மீது எடுக்கும் நடவடிக்கையை காட்டுகிறது” என்றார்.
சென்னிமலையில் 18 ஆடுகள் நேற்று தெருநாய்க்களால் கொல்லப்பட்டதை குறித்து கேட்டதற்கு, “கடந்த ஆறு மாதமாக தான் இந்த பிரச்சனை ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ளது. ஈரோடு கலெக்டர், நாய்கள் பிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பார். விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவது குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். தற்பொழுது இயற்கை பேரிடர் சட்டத்தின் கீழ் நிவாரண பாதிப்புகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அது இந்த சம்பவங்களில் பொருந்தாது. ஆடுகளை பாதுகாப்பாக வைக்க ஒரு மாதிரி ஆட்டுப்பட்டி தயாரிக்கப்பட்டது விவசாயிகள் அதை பயன்படுத்தலாம்” என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் எம்பி அந்தியூர் செல்வராஜ், எம்எல்ஏக்கள் ஏஜி. வெங்கடாஜலம், விசி சந்திரகுமார், கலெக்டர் ராஜகோபால் சுங்காரா உட்பட கலந்து கொண்டனர்.