
மார்ச் 8ஆம் தேதியான இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பெண்களைப் போற்றும் வகையில் மகளிர் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில், பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக நிற்கிறது. குழந்தை முதல் மூதாட்டி வரை, தினமும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு கொலை விலக்கு அளிக்க வேண்டும் என மகாராஷ்டிராவில் உள்ள சரத் பவாரின் சரத்சந்திர பவார்-தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவர் ஒருவர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். சரத் பவார் தலைமையிலான சரத்சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் ரோகிணி காட்சே எழுதிய அந்த கடிதத்தில், “மும்பையில் 12 வயது சிறுமி சமீபத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதனால், பெண்களை அடக்க வேண்டும் என்ற மனநிலை உள்ளவர்கள், பாலியல் வன்கொடுமை செய்ய மனநிலை உள்ளவர்கள், சட்ட ஒழுங்கிற்குப் புறம்பாக நடப்பவர்கள் உள்ளிட்டவர்களை, பெண்கள் கொலை செய்ய விரும்புகிறார்கள்.
அனைத்து பெண்களின் சார்பாகவும், ஒரு கொலை செய்வதற்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு நாங்கள் கோருகிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கடத்தல், வீட்டு வன்முறை உள்ளிட்டவை நடப்பதால் இந்தியா மிகவும் பாதுகாப்பற்ற நாடு என்று கணக்கெடுப்பு கூறுகிறது. எங்கள் கோரிக்கையை தீவிரமாக பரிசீலித்து அது நிறைவேற்றப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.