இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது.
அந்த வகையில் மறைந்த சுதந்திரப் போராட்ட வீரரும், பீகார் முன்னாள் முதல்வருமான கர்பூரி தாக்கூருக்கு நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. கர்பூரி தாக்கூர் ஆட்சிக் காலத்தில் பீகாரில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூக மக்களுக்காகப் போராடியதால் இவர் ‘மக்கள் தலைவர்’ எனவும் அழைக்கப்பட்டார்.
இவர் அரசுப் பணி, கல்வியில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்திற்கு இட ஒதுக்கீடு கோரி செயல்பட்டவர் ஆவார். பீகார் முதல்வராக இவர் இருந்தபோது பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வியில் 12% இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர். கர்பூரி தாக்கூர் மறைந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கர்பூரி தாக்கூரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு பாட்னாவில் நேற்று (24-01-24) பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருக்கும் தகவலை அவருடைய மகனும் கட்சி நிர்வாகியுமான ராமநாத் தாக்கூர் தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமரிடம் இருந்து எனக்கு நேரடி தகவல் வரவில்லை. இருந்தபோதும், மறைந்த தலைவருக்கு நாட்டின் உயரிய விருது அறிவித்ததன் முழுப் பெருமையும் பிரதமரையே சேரும். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்ததிலிருந்து மத்திய அரசிடம் இந்த கோரிக்கையை முன்வைத்து வந்தோம். தற்போது எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றியதற்காக பிரதமருக்கும் அவருடைய அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.