Skip to main content

“தமிழர்களுக்கு மொழி உணர்ச்சியைப் பற்றி ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம்” - அமைச்சர் ரகுபதி விளாசல்!

Published on 28/02/2025 | Edited on 28/02/2025

 

Minister Raghupathi says Governor should not lecture Tamils ​​about their language sensibilities

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய பாஜக அரசுக்கு  தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் தமிழக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி சார்பில் வெளியிடப்பட்ட பதிவில், “தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன். ஏராளமான சிரமங்கள் மற்றும் முறைசார் தடங்கல்கள் இருந்தபோதிலும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் இவர்களின் நேர்மறையான ஆற்றலையும் தொழில்முனைவுத் திறனையும் காண்பது ஊக்கமளிப்பதாக இருந்தது.

இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது. தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள். இளைஞர்களிடையே காணப்படும் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் சிக்கல்கள் தீவிரமானவை. ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட போராட்டங்களுக்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது.

மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள். துரதிருஷ்டவசமாக ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது. மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பொருளாதாரத்திலும் கல்வியிலும் பெற்றிருக்கும் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தமிழ்நாட்டின் மீது வெறுப்பை உமிழ்வதையே தனது கடமையெனக் கருதி செயலாற்றி வருகிறார் ஆளுநர் ரவி. தனது அரசியலமைப்பு கடமைகளை மறந்து ஆதாரமற்ற அவதூறுகளை வைத்து தமிழ்நாட்டை இழிவுப்படுத்தும் அரசியலை செய்வதற்காகவே மத்திய பாஜக அரசு ஆர்.என்.ரவியை ஆளுநராக வைத்திருக்கிறது.

Minister Raghupathi says Governor should not lecture Tamils ​​about their language sensibilities

தனது சமூக வலைதளக் கணக்கை இதற்காகவே பிரதானமாக பயன்படுத்திவரும் ஆளுநர் ரவி தனது இன்றையப் பதிவில், ‘இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது, ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது. தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள்’ எனக் கூறியிருக்கிறார். தமிழ்நாடு எதில் பின் தங்கியுள்ளது என ஆளுநர் ரவியால் சொல்ல முடியுமா?. கல்வியில், மருத்துவத்தில், பொருளாதாரத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிட முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதை மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களே சொல்லும், அதையெல்லாம் ஆளுநர் ரவி படித்தால்தானே?. படித்தாலும் தமிழ்நாட்டின் மீது வெறுப்பேறிய கண்களுக்கு அவையெல்லாம் எப்படித் தெரியும்?.

தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி இருமொழிக் கொள்கையினால் சாதித்தவை. தமிழ்நாட்டில் எப்படியாவது இந்தியை திணிக்கலாம் அதற்கு புதிய கல்விக் கொள்கையை ஒரு வழியாக வைத்து உள்நுழையலாம் எனும் ஆதிக்கவாதிகளின் சதியை அறியாதவர்களா தமிழர்கள்?. தமிழ் - தமிழ்நாடு - தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றின் மீது  தொடர்ந்து வெறுப்பை உமிழும் ஆளுநர் ரவி தமிழர்களுக்கு மொழியுணர்ச்சியை பற்றி பாடம் எடுக்க வேண்டாம். சனாதனத்தையும் சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டில் காலூன்றச் செய்திட குட்டிக்கரணம் போடும் ஆளுநரின் நடவடிக்கைகள் தமிழ் மண்ணில் வேறூன்றவில்லை. அப்படித்தான் மும்மொழி கொள்கையும் மூக்கறுபட்டு நிற்க போகிறது. மொழித் தேர்வு எது? மொழித் திணிப்பு எது? என்பது எங்களுக்கு தெரியும், இந்த நாடகங்கள் எல்லாம் இங்கே எடுபடாது” எனக் கட்டாமாக தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்