
2026ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில், நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதனால், தமிழ்நாடு 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. மத்திய அரசு முயற்சி செய்து வரும் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து விவாதிக்க, தமிழக அரசு கடந்த 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியது.
இதில், மொத்தம் 63 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன. பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர், புதிய தமிழகம் உள்ளிட்ட 5 கட்சிகள் இக்கூட்டத்தை புறக்கணித்து பங்கேற்கவில்லை. இதனையடுத்து, மற்ற கட்சிகளின் ஆதரவோடு, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டை தொடர்ந்து, கர்நாடகா முதல்வர் சித்தராமையா மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும், மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு தற்போது எதிராகப் பேசியுள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாவது, “பா.ஜ.கவுக்கு தெற்கு பகுதியில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை. அதனால், தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களை பழிவாங்க பா.ஜ.க முயற்சி செய்கிறது. வட மாநிலங்களுக்கு மட்டுமே பயனளிக்கும் இந்த நடவடிக்கை மூலம் தென் மாநிலங்களை முடிக்க பாஜக விரும்புகிறது.
குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அவர்கள் சொன்னது போல், நாங்கள் அதை நிறைவேற்றினோம். அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த தொகுதி மறுசீரமைப்பை மத்திய அரசு நிறுத்தி வைக்கட்டும். அதன் பின்னர், தென் மாநிலங்களின் மக்கள் தொகை வளர்ச்சியைப் பார்க்கட்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, விகிதாச்சார அடிப்படையில் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் 60 ஆக இருக்கும். வித்தியாசம் 60 இடங்களாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஆகியோரைத் தொடர்ந்து, தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டியும், மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது தென் மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கைக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.