நாளை (19/07/2021) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல், தி.மு.க, காங்கிரஸ், உள்ளிட்ட 30- க்கும் மேற்பட்டக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாடாளுமன்றத்தில் மக்கள் தொடர்பான பிரச்சனைகள் சுமுகமான முறையில் எழுப்பப்பட வேண்டும். விவாதங்களுக்கு பதிலளிக்க அரசுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்; மக்கள் பிரதிநிதிகள் உண்மையான கள நிலவரத்தை அறிய வேண்டும். இரு அவைகளிலும் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெற வேண்டும்" எனத் தெரிவித்தார்.