
வேலூர் அடுத்த விருதம்பட்டில் தமிழக வெற்றி கழகத்தின் வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக பெண்கள் மீதான தொடர் வன்முறைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அந்த கையெழுத்து இயக்கம் தொடர்பாக வைக்கப்பட்டுள்ள பேனரில் ‘பெண்கள் துன்புறுத்தலுக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம்’ என்பதற்கு பதிலாக ‘பெண்கள் துன்புறுத்தலுக்கு நாங்கள் துணை நிற்கிறோம்’ என்று குறிப்பிடும் வகையில் ஆங்கிலத்தில் ‘We stand for women harassment’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல், இன்று காலை வேலூர் மேற்கு மாவட்டம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில், ‘பெண்கள் மீதான வன்கொடுமையை தடுக்க தவறிய ஆளும் திமுக அரசை கண்டித்து’ என்ற வாசகத்தில் தவறிய என்பதற்கு பதிலாக ‘தவரிய’ என்றும் கண்டித்து என்பதற்கு பதிலாக ‘கன்டித்து’ என்றும் எழுத்துப் பிழையுடன் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு இடத்தில் தமிழில் எழுத்துப்பிழையும், இன்னொரு இடத்தில் ஆங்கிலத்தில் வாக்கிய பிழையும் இடம் பெற்றிருந்தது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.