
மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் லட்சுமன் உடேகர் இயக்கத்தில் விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான இந்தி படம் ‘சாவா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் மகாராஷ்டிரா பேரரசர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக படத்தின் ட்ரெய்லர் வெளியான போது, அதில் இடம்பெற்றிருந்த 'லெஜிம்' நடனக் காட்சி, மகாராஷ்டிரா தொழில்துறை அமைச்சர் உதய் சமந்த் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களால் எதிர்ப்பை சம்பாதித்தது. இதனால் அந்தக் காட்சியை படத்தில் இருந்து படக்குழு நீக்கியது. பின்பு குஜராத்தில் ஒரு திரையரங்கில் சம்பாஜி கதாபாத்திரம் சித்ரவதை படும் காட்சியின் போது ஒருவர் ஆத்திரப்பட்டு திரையை கிழித்தார்.
பின்பு இப்படத்தில் மாராஷ்டிரா போர்வீரர்களான கனோஜி ஷிர்கே மற்றும் கன்ஹோஜி ஷிர்கே ஆகியோரை தவறாக சித்தரித்துள்ளதாக அப்போர் வீரர்களின் 13வது வாரிசான லஷ்மிகாந்த் ராஜே ஷிர்கே சமீபத்தில் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து இயக்குநர் லட்சுமன் உடேகர் கனோஜி மற்றும் கன்ஹோஜியின் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம், அவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியதாகத் தகவல் வெளியானது.
இப்படி தொடர்ந்து இப்படம் தொடர்பாக பல சம்பவங்கள் நடக்க தற்போது மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது இப்படத்தில் முகலாயப் படைகள் மராத்தியர்களிடமிருந்து பொக்கிஷங்களைக் கொள்ளையடித்து அசிர்கார் கோட்டையில் மறைத்து வைத்ததாக ஒரு காட்சி இடம் பெறுகிறது. இதனால் இப்போது அந்த அசிர்கார் கோட்டையில் தங்கபுதையல் இருக்கும் என நம்பி அந்த ஊர் மக்கள் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 3 மணி வரை தலையில் லைட் மாட்டிக்கொண்டும் கையில் சல்லடை வைத்துக் கொண்டும் தங்கப் புதையலைத் தேடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் அதை பார்த்த போலீசார் அந்த இடத்திற்கு விரைந்தனர். இதை அறிந்த மக்கள் போலீஸ் வருவதற்கு முன்பு அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.