![reel](/modules/blazyloading/images/loader.png)
'ரீல்' படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினர். அப்போது நிகழ்வில் இயக்குனர் முனுசாமி கூறும்போது.... "இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். இது வழக்கமான கதையாக இருந்தாலும், கதை சொல்லலில் வித்தியாசமான மற்றும் தனித்துவமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி. இந்தப் படம் வேலையில்லாத ஒரு பையனுக்கும், கிராமத்து பெண்ணுக்கும் இடையே நிகழும் காதலையும், சமூகம் அவர்களை எப்படி நடத்துகிறது என்பதையும் பேசும் படம். இந்த படத்தில் உதயராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், பல யோசனைகளுக்குப் பிறகு அவர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவந்திகா இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்" என்றார்.
நடிகர் உதயராஜ் இப்படம் குறித்து கூறும்போது... "இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த மொத்த குழுவுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படம் இரண்டு வித்தியாசமான வாழ்க்கை முறைகளை சுற்றியது. துல்லியமாக சொல்வதென்றால், வசதியான குடும்ப பின்னணியில் இருந்து வந்த ஒரு பையனை பற்றியும், கிராமத்தில் இருந்து தன் வாழ்வாதாரத்திற்காக நகரத்துக்கு வந்த பெண்ணை பற்றியும் பேசும் படம். அவளது அப்பாவியான தன்மையால் அவளை அனைவரும் ஏமாற்றுகிறார்கள். இந்த இருவரும் எவ்வாறு சந்தித்துக் கொள்கிறார்கள், அதற்கு பிறகு என்ன ஆகிறது என்பது மீதிக்கதை. இத்திரைப்படம் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளால் சஸ்பென்ஸ் காட்சிகளால் நகர்கிறது. சினிமா துறையில் என் பயணம் துவங்கியது, மலையாளத்தில் நான் நடித்த சில குறும்படங்களின் மூலம் தான். அங்கு இன்னும் பல வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும், என் முக்கிய நோக்கம் தமிழ் படத்தில் நடிப்பதே. இப்போது 'ரீல்' படத்தின் மூலம் அது நிறைவேறி இருக்கிறது" என்றார். திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் ஏற்கனவே முடிந்து, படத்தை பிப்ரவரி மாத இறுதியில் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.