
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி.சாமி. நீண்ட பல ஆண்டுகளாக தி.மு.க.வில் உள்ளார். இதற்கிடையில், அ.தி.மு.கவில் இருந்து தி.மு.கவுக்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாஜலத்திற்கு, சில தினங்களுக்கு முன் தி.மு.க தலைமை ஈரோடு மத்திய, மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கியது.
அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவருக்கு மாவட்ட அளவில் உயர் பதவியை கொடுத்தது பெருந்துறை பகுதி தி.மு.கவினரிடையே கொந்தளிக்க வைத்தது. தி.மு.க நிர்வாகிகள் பலரும் அ.தி.மு.க போன்ற மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவருக்கு தான் தி.மு.கவில் பதவி கிடைக்குமா? இந்த கட்சிக்காக உழைத்த எங்களுக்கெல்லாம் பதவி கொடுக்க கூடாதா என்று புலம்பியதாகக் கூறப்பட்டது. இதையே தங்களது உணர்வாக கட்சி தலைமைக்கும் கடிதம் மூலம் வெளிப்படுத்தினார்கள்.
இந்நிலையில், திமுக பெருந்துறை ஒன்றிய செயலாளர் பதவியை கே.பி. சாமி ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க ஆளும்கட்சியாக தி.மு.க இருக்கும் நிலையில் அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் ஒருவரே தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக வந்த செய்தி ஈரோடு தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி கூறும்போது, “கட்சி தலைமைக்கும் தகவல் தெரிவித்துள்ளேன். ஈரோடு அமைச்சர் முத்துசாமியிடமும் தகவல் தெரிவித்துள்ளேன். ஓரிரு தினங்களில் இதுபற்றி உங்களுக்கு தெரிவிக்கிறேன்” என்றார்.