அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மறைந்த இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு தி.க. தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு அன்பழகன் திருவுருவப் படத்தை திறந்து வைத்தார்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவு, தனிப்பட்ட முறையில் எனக்கு தனிப்பட்ட இழப்பு. எனக்கு தொடர்ந்து தோள் கொடுத்தவர் பேராசிரியர். வழிகாட்டியாக மட்டுமல்ல தந்தையாகவும் பேராசிரியர் இருந்தார் என்றால் அது மிகையல்ல" என்று உருக்கமாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய பொருளாளர் துரைமுருகன். " எங்கள் இதயத்தின் சுமை இன்னும் இரங்கவில்லை. இரட்டை கோபுரமாக கலைஞரும் பேராசிரியரும் இருந்தார்கள். பேராசிரியர் பொதுச்செயலாளராக இருந்த 43 ஆண்டுகளில் அவருக்கும் கலைஞருக்கும் எந்த கருத்து வேறுபாடும் ஏற்பட்டதில்லை. இனிமேல் ஸ்டாலின் தான் எங்களுக்கு கலைஞர், பேராசிரியர்" என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.