தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவ - மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து நேற்று முதல் இந்தத் திட்டம் செயல்பட துவங்கியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை கீழஅண்ணாதோப்பில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் நேற்று தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து அவர், அந்த பள்ளியில் உள்ள குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். குழந்தைகளுக்கு உணவுகளை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார். இந்த நிலையில், மதுரையை தொடர்ந்து சென்னை, திருச்சி, தஞ்சை, கரூர் உள்ளிட தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் இந்த காலை சிற்றுண்டி திட்ட தொடக்க விழா இன்று காலை துறையூர் அருகே உள்ள நடுவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. இதில் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு குழந்தைகளுக்கு உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சரும் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் பிரதீப் குமார், எம்.எல்.ஏக்கள் ஸ்டாலின்குமார், தியாகராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.