தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதி மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி தற்காலிக தமிழ் ஆசிரியை பள்ளி வளாகத்திலேயே வைத்து கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கல்வித்துறை, காவல்துறை என ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் மல்லிபட்டினத்தில் முகாமிட்டுள்ளனர். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரைந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு விளக்கமான அறிக்கை கொடுத்துள்ளார். அந்த அறிக்கையில், கடந்த 10.06.2024 முதல் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக தமிழ் ஆசிரியராக செல்வி ரமணி 6 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை பாடம் போதித்து வந்தார். இவருக்கு முதல் பாட வேலை இல்லை என்பதால் இன்று(20.11.2024) காலை 10.10 மணிக்கு ஆசிரியர்களுக்கான ஓய்வு அறை வராண்டாவில் சின்னமனை மதன் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
எதிர்பாராத விதமாக ஆசிரியை ரமணி கழுத்து வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்திவிட்டு ஓடும் போது ஆசிரியர்கள் மதனை பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர். ஆசிரியை ரமணி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்துவிட்டார். இது குறித்து போலிசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணை செய்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.