Skip to main content

டாப்பர் மாணவியை முடக்கிய பெற்றோர்; குழந்தையிடம் எதிரொலித்த பாதிப்பு - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :70

Published on 26/11/2024 | Edited on 26/11/2024
parenting counselor asha bhagyaraj advice 70

சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட பாதிப்பினால் குழந்தையிடம் கோபத்தை காண்பித்த பெண்ணுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.

எம்.பில் பட்டப்படிப்பு முடிந்த 40வயது பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையிடம் அனைத்து காரியங்களிலும் கோபப்படுவதாகவும் அடிப்பதாகவும் கூறி தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று என்னிடம் வந்தார். அவரிடம் பேசியதில், சிறு வயதில் அந்த பெண் தனது பெற்றோர்களால் மிகவும் பாதிக்கப்பட்டதைக் விவரித்தார். அதில் பெற்றோர்கள் தான் என்ன வேலை செய்தாலும் சரியாக செய்வதில்லை, அறிவில்லை என திட்டியிருக்கின்றனர். பெற்றோர் தன்னுடன் கடுமையாக நடந்துகொண்டது. பிறர் முன்பு அவமானப்படுத்தி பேசியது போன்ற பல விஷயங்களைக் கூறினார். மேலும் தன்னம்பிக்கை இன்றி பிறரை சார்ந்து வாழும் சூழலுக்கு அந்த பெண் தள்ளப்பட்டிருந்தார்.இந்த காரணங்களால் அந்த பெண், யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் தன்னுடைய குழந்தையிடம் அந்த பெண் கோபத்தை வெளிப்படுத்தி அடித்துள்ளார் என்பது தெரிய வந்தது.

சுவாரசியம் என்னவென்றால் அந்த பெண் எம்.பில் படிக்கும் போது டாப்பர் மாணவியாக கோல்ட் மெடல் வாங்கியிருக்கிறார். அப்படிப்பட்ட அந்த பெண்ணை அவரது பெற்றோர் மற்றும் சுற்றியிருப்பவர்கள் நீ எதற்கும் உதவமாட்டாய் என்று சொல்லி தன்னுடைய அடையாளத்தையே அப்பெண் இழந்திருக்கிறார். அதன் பிறகு அந்த பெண்ணை குழந்தையுடன் கவுன்சிலிங் வர சொன்னேன். அதே போல் தன்னுடைய குழந்தையை அழைத்துக் கொண்டு தொடர்ந்து என்னிடம் கவுன்சிலிங் பெற்று வந்தார். முதலில் அந்த பெண்ணுக்கு தன்னம்பிக்கை வரவழைக்க சின்ன சின்ன விஷயங்களில் பாராட்டத் தொடங்கினேன். எதாவது பேசும்போது நன்றாக பேசினாலோ அல்லது எதாவது வேலை செய்யும்போது சிறப்பாக அதை செய்து முடித்தாலோ அதற்கு சின்ன மதிப்பு கொடுத்து பாராட்ட தொடங்கினேன்.

நான் பாராட்டியது அந்த பெண்ணுக்கு தன்னம்பிக்கை எண்ணத்தை அதிகரிக்க செய்ய உதவியது. அதோடு குழந்தை அருகில் இருந்ததால் தங்களது அம்மாவின் நல்ல செயல்களை தொடர்ந்து கவனித்து வந்தனர். இப்படி செய்தது அந்த குழந்தைக்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்தது. இப்போது அந்த பெண்ணிடம் ஒருவர் பாராட்ட வேண்டும் என்பதற்காக உங்களின் செயல்களை நீங்கள் செய்ய வேண்டாம். முடிந்தளவிற்கு சுயமாக நீங்கள் செய்வது சரி என்று முடிவெடுத்து உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள் என்றேன். அதேபோல் அந்த பெண்ணும் நான் சொன்னதை தொடர்ந்து பின்பற்றி வந்தார். இப்போது நல்ல வருமானம் வரும் வேலையை செய்து வருகிறார். அதேபோல் குழந்தையிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து பாசத்துடன் அணுகத் தொடங்கிவிட்டார். தொடர்ந்து கவுன்சிலிவ் வந்த அந்த பெண், தன்னுடைய பிரச்சனைகளை தானே சரி செய்துகொள்ளும் அளவிற்கு தேறியுள்ளார் என்றார்.