‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் கலந்துகொண்டு அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் நம்மிடம் பகிர்ந்துவருகின்றனர். அந்த வகையில் திராவிட சிந்தனையாளர், பேச்சாளர் நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க. கட்சியின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து தனது கருத்தை பகிர்ந்துகொண்டார்.
“எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கும் வரை அ.தி.மு.க. ஒரு இஞ்ச் கூட உயராது. இதுதான் நிதர்சனமான உண்மை. இது அதிமுக தொண்டர்களுக்கு நன்றாகத் தெரியும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, அ.தி.மு.க. கட்சியின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள மாவட்ட நிர்வாகிகளை, அவர் இருக்கும் இடத்திற்கே வரச் சொல்வார். பிறகு யாருக்கு நிர்வாக பொறுப்பு தருவது என்று தெளிவான சிந்தனையுடன் விளிம்பு நிலை மக்களுக்கும் அதிகாரம் என்பதை நடைமுறைப்படுத்தியிருந்தார். இப்போது இருக்கும் அ.தி.மு.க. கட்சியில் இதுபோல் செய்வதற்கு யாரும் இல்லை.
பா.ஜ.க.-வுடன் கூட்டணி இல்லை என்பதை உணர்த்துவதற்காக எடப்பாடி பழனிசாமி போடும் நாடகத்திற்குப் பழியானவர் தளவாய் சுந்தரம். இவர் ஆர்.எஸ்.எஸ். பேரணியைத் தொடங்கி வைத்தார் என்பதற்காக அ.தி.மு.கவிலிருந்து தள்ளி வைத்தார்கள். இப்போது மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டனர். அதற்கு காரணம் என்னவென்றால், அவர் கட்சியை விட்டு பா.ஜ.க. அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொள்வார் என்ற பயத்தில் மீண்டும் அவரை கட்சியில் அவசரவசரமாக இணைத்துக்கொண்டனர்.
இப்போது இருக்கும் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இல்லை. கட்டுப்பாடு என்றைக்கு கேள்விக் குறியானதோ அன்றைக்கே கட்சி குட்டிச் சுவராகவிடும். முன்பு ஜெயலலிதா அ.தி.மு.க. கட்சியிலுள்ள தொண்டர்களிடம், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். புகைப்படங்களை மட்டும் பயன்படுத்தச் சொன்னார். அதோடு வேறு யாருடைய புகைப்படத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டார். உடனே அனைவரும் கட்டுப்பட்டு அவர் சொன்னதைக் கேட்டனர். ஆனால் இப்போது இருக்கும் தொண்டர்கள் பழனி சாமியின் புகைப்படத்தைப் பைத்தியம் போல் விதவிதமாக காட்சிப்படுத்தி வருகின்றனர். இதிலிருந்தே அ.தி.மு.க. கட்சி கரைந்து வருவதைப் பார்க்க முடியும்.
வி.சி.க. தலைவர் திருமாவளவன், கே.பி.முனுசாமி ஆகியோர் வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் அதிமுகவிற்கு வாழவா? சாவா? என்ற நிலையில்தான் இருக்கும் என்று சொல்லியிருந்தனர். அது 100% உண்மை. பா.ஜ.க எப்போதுமே வலுவாக இருக்கக்கூடிய ஒரு கட்சியைப் பிரித்து கையாளும் திட்டத்தைச் செய்யும். இதை இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்திவிட்டனர். தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த அ.தி.மு.க.-வை குறி வைத்தனர். அ.தி.மு.க.-வும் அதற்கு பலியாகிவிட்டது. அக்கட்சியால் பா.ஜ.க.-வை எதிர்த்து நிற்கமுடியவில்லை. தமிழ்நாட்டில் பா.ஜ.க. எதிர்ப்புதான் அரசியல். அதைச் செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை. அவரை ஏமாற்ற பா.ஜ.க. போட்ட திட்டம் நிறைவேறப் போகிறது. எடப்பாடி பழனிசாமி பலியாகப்போகிறோர். அவரே காவி வேட்டிக் கட்டி வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை.
விஜய் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று அறிக்கை விட்டுள்ளார். இதுவும் பா.ஜ.க.வின் வேலை இல்லையென்று சொல்லிவிடமுடியாது. தி.மு.க. ஆட்சியில் இன்றைக்கு 2 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரடியாகப் பலன் பெற்று வருகிறார்கள். நன்றி உணர்ச்சி தமிழர்களுக்கு இருந்தால் தி.மு.க. ஆட்சிக்கு வருவதை எந்த சக்தியும் தடுக்க முடியாது. விஜய் தி.மு.க.வை பலவீனப்படுத்துவார் என்று பேசிவரும் இந்த சூழலில், அ.தி.மு.க.வுடன் அவர் கூட்டணி வைக்க வேண்டாம் என்று விஜய்க்கு பக்கபலமாக பா.ஜ.க. உதவியிருக்கும். இப்படி செய்வதன் மூலம் விஜய்யை தன் பக்கம் இழுத்துக்கொள்ளலாம் என்று பா.ஜ.க. நினைத்தால் விஜய் கட்டுப்படாமல் திமிறி எழுவார்” என்றார்.