Skip to main content

 தமிழகத்தின் 3வது விசிறி பாறை கல் கண்டுபிடிப்பு!

Published on 25/11/2024 | Edited on 25/11/2024
Tamil Nadu 3rd fan rock discovery

தமிழகத்தைப் பொறுத்தவரை பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் அதிக அளவில் காணப்படக்கூடிய   மாவட்டமாக புதுக்கோட்டை விளங்குகிறது. பொதுவாக பெருங்கற்கால ஈம சின்னங்களை  கற்பதுக்கை, கற்திட்டை, கற்குவியல், கல்வட்டங்கள், நெடுங்கல் அல்லது குத்துக்கல், தொப்பிக்கல், விசிறி பலகை போன்று பல வகைகளாகப் பிரிக்கலாம். இதுவரை புதுக்கோட்டையில் குத்துக்கல் அல்லது நெடுங்கல், தொப்பிக்கல் கல்வட்டங்கள், கற்திட்டைகள் போன்றவைகள் காணப்படுகின்றன. குறிப்பாக சித்தன்னவாசல், குடுமியான்மலை, தாயினிப்பட்டி, செங்கழு, கலசமங்கலம், ஆகிய இடங்களை குறிப்பிடலாம்.   

இந்த பெருங்கற்கால ஈம சின்ன வகைகளில் விசிறி பலகை (Anthropomorphic ) என்ற ஒன்று ஒரு வகையான அரிய  வகை ஈமச்சின்ன அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. விசிறி பலகை கற்கள் தமிழ்நாட்டில் இரண்டு  இடங்களில் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த விசிறி பலகைகள் என்பது பெரும் கற்களைக் கொண்டு முழுமையாக ஈம சின்னங்கள் அமைத்த பெருங்கற்கால மக்கள் பின்னாளில் கற்களை வடிவமாக்கி பயன்படுத்தினார்கள். இது சிற்பக் கலைகளின் தொடக்கக் கால கல் அமைப்பு என்று கூட குறிப்பிடலாம்.  ஏனெனில், அதுவரை குத்துக்கல் அல்லது நெடுங்கல் என்று சொல்லக்கூடிய அந்த வகை நினைவுச் சின்னமானது இறந்தவர் நினைவாக ஒரு நீண்ட நெடிய பலகைக் கல்லை அந்த இடத்தில் நட்டு வைப்பார்கள். விசிறி பலகை என்பது ஒரு மனிதருடைய உருவத்தை ஒத்து வடிவத்தில் தலை, கை, கால் என்ற உடல் உறுப்புகளோடு ஒப்பிடலாம். 

தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தான் இந்த விசிறி பலகைகள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மிகவும் சொற்ப அளவிலான விசிறி பலகைகளே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விசிறி பலகை கல்லானது சில இடங்களில் தாய் தெய்வ வழிபாடாகவும் குறியீடாகவுமே காணப்படுகிறது. இன்றளவும் முன்னோர்களின் நினைவாக இந்த விசிறி பலகைகளை மக்கள் வழிபடுவதை தமிழகத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.

தமிழகத்தில் இதுவரை "திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா மோட்டூரில் ஒன்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உடையார் நத்தம்" என்ற கிராமத்தில் இன்னொன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூர் அருகே உள்ள வெள்ளவெட்டான்விடுதிக்கும் மட்டையன்பட்டிக்கும் இடையே உள்ள வீரன் காளி பொட்டல் எனும் இடத்தில் விசிறி பாறை கல் ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. 

இது 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களைக் கொண்ட இடமாக விளங்கி இருந்துள்ளது. இதில் நீண்ட நெடிய குத்துக்கற்களும், கற்குவியல்களும், ஈமத்தாழிகளும் காணப்படுகிறது. இவை அனைத்தும் குளம் தூர் வாரிய போது முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டதாகவும் குத்து கற்கள் சேதம் அடைந்தும் காணப்படுகிறது. இதில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட விசிறி பாறை கல்லானது சாய்ந்த நிலையில் காணப்பட்டது. மேலும், ஒரு விசிறியின் இடது புறம் கை அமைப்பு உடைந்த நிலையில் 180 செ.மீ உயரம், 86செ.மீ அகலம் , 11 செ.மீ கனம் கொண்டதாகக் காணப்படுகிறது. 

இதனைப் புதுகை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கண்டறிந்தனர் இதனைப் புதுகை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு நடுவம் மற்றும் டெல்டா எக்ஸ்புளோரர்ஸ் இணைந்து அந்த இடத்திலேயே மறுசீரமைப்பு செய்து பாதுகாப்பாக நட்டு வைத்தனர். இந்தக்குழு கிடைக்கும் வரலாற்றுத் தரவுகள், கல்வெட்டுகள், கோவில் கல்வெட்டுகள், சிற்பங்கள், பெருங்கற்கால நினைவுச்சின்னங்களை கண்டறிவது மட்டுமின்றி அதே இடத்தில் மறுசீரமைப்பு செய்து வைக்கும் நோக்கத்தோடும், பாதுகாப்பின்றி உள்ள வரலாற்று பொக்கிஷங்களையும் கண்டறிந்து அருங்காட்சியகங்களுக்கும், உரிய அலுவலகங்களுக்கும் ஒப்படைப்பது போன்ற செயல்பாடுகளில் செயல்பட்டு வருகிறது. 

மேலும், ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ஜெய்சங்கர்,  வார்டு உறுப்பினர் செந்தில்ராஜ் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்போடு மேற்படி கல் எடுத்து வைக்க உதவி செய்தனர். புதுகை தொல்லியல் மற்றும் வரலாற்று நடுவம் தலைவர் புதுகை பாண்டியன், செயலாளர்  இந்திரஜித் , உறுப்பினர்கள் இராஜகோபால் , முனுசாமி மற்றும் ஊர் பொது மக்கள் வெள்ளவெட்டாண்விடுதி சேர்ந்த யோகேஸ்வரன், கோகுல் , பெருங்கலூர்  ஆனந்தராஜ் ஆகியோர் உடன் இருந்து உதவி செய்தனர்.

தொன்மை வரலாற்று சான்றுகள் நிறைந்திருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு விசிறி பாறை கல் கண்டுபிடித்திருப்பது பெரும் சிறப்பாக உள்ளது என்கின்றனர்.