சென்னை கண்ணகி நகரில் நேற்று(25-11-24) ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ‘அதானி ஊழல் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை கொடுத்திருக்கிறாரே, உங்களின் பதில் என்ன ?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழக முதலமைச்சர், “அவருக்கு வேறு வேலை இல்லை; தினமும் ஒரு அறிக்கை கொடுப்பார்” என கூறிவிட்டுச் சென்றார்.
முதல்வரின் இந்த பதில், பாமகவினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். அவரைத் தொடர்ந்து, சிமான் உள்ளிட்ட சில அரசியல் கட்சித் தலைவர்களும் முதல்வரின் பதிலுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிதம்பரத்தில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சிலர் ஆர்ப்பாட்டத்தின் போது, சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் செல்லும் தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.