Skip to main content

“மேகதாதுவில் கர்நாடக அரசால் அணை கட்டவே முடியாது” - அமைச்சர் துரைமுருகன்

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Minister Duraimurugan has said that  Karnataka government cannot build a dam in Meghaduta

 

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கழிஞ்சூர் மற்றும் தாராபடவேடு ஆகிய இடங்களில் உள்ள ஏரிகளில் தூர் வாரும் பணிகளையும், அந்தப் பகுதிகளில் சுற்றுலாத் தளமாக மாற்ற அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது அதிகாரிகளிடம் பேசிய அவர், பொதுமக்களின் வசதிக்காக சுற்றுலா இடத்தை விரைந்து சரி செய்யும்படியும் ஏரிகளில் நீர்வரத்து கால்வாய்களை விரைந்து தூர் வாரும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “மேகதாது அணை தொடர்பான பிரச்சனையில், கர்நாடக அரசு அணை கட்ட முடியாது. ஆனால் கர்நாடகா அரசு கட்டுவோம் என்று சொல்வார்கள். அது அவர்களுடைய ஆசை; ஆனால் உரிமை கிடையாது. அணை கட்டக் கூடாது என்று சொல்வதற்கு நமக்கு உரிமை உண்டு. காரணம் மேகதாது அணையில் இருந்து இயற்கையாகவே தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. பில்லி குண்டு அணை வரையில் 80 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வருகிறது. இயற்கையாக வருகின்ற இடத்தில் தான் அணை காட்டுகிறோம் என்று சொல்வது உகந்தது அல்ல. கர்நாடக அரசால் அணை கட்ட முடியாது. காரணம் மத்திய நீர் மேலாண்மை வாரியம், மாசு கட்டுப்பாட்டு துறை அனுமதி, வனத்துறை அனுமதி கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தாலும் அதன் பிறகு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். எனவே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட முடியாது. அரசியலுக்காக இதெல்லாம் அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள்” என்றார்.

 

தமிழகத்தில் கனிம வளங்கள் முறைகேடாக கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அதிமுக ஆட்சியில் கனிமவளத் துறையில் 1200 கோடி நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் தற்போதுள்ள அரசு அதனை நிவர்த்தி செய்து, 1600 கோடி ரூபாய் லாபத்தில் கனிம வளத்துறை இயங்கி வருகிறது.” என்று பதிலளித்தார்.

 

தொடர்ந்து பேசிய அவர், “பெண்களுக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படுவதில், யாருக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட வேண்டும். இதை எதிர்க்கட்சிகள் இப்படி தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். பாலாற்றில் பல இடங்களில் அணைகள் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது வேலூர் அருகே சேண்பாக்கம், பொய்கை திருப்பாற்கடல் உள்ளிட்ட 15 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது” என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்