முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்டப் பொறுப்பாளர் பால்கி, அரசியல் தொடர்பான பல்வேறு தகவல்களை நமது நக்கீரன் நேர்காணல் வாயிலாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்க நீதிமன்றம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது குறித்து தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
“பிரதமர் மோடியுடன் நல்ல உறவுடன் இருக்கும் அமெரிக்க அரசு அதானி மீதான குற்றச்சாட்டை ஆதாரத்துடன் முன் வைத்துள்ளது. அதானிக்கு கொடுத்த பிடிவாரண்ட் பற்றி கண்டிப்பாக அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் முன்பு அதானி குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பேசியபோது மோடி, அமித்ஷா உள்ளிட்ட பலரும் அதானிக்கு ஆதரவாகப் பேசியிருந்தனர். இப்போது அமெரிக்க நீதிமன்றம் அதானி மீது போட்டிருக்ககூடிய பிடிவாரண்ட் என்பது சாதாரணமானது இல்லை. அதானி முதலில் தரமற்ற நிலக்கரியை பயன்படுத்தி ரூ.6000 கோடி ஊழல் செய்தார். பிறகு பங்குச் சந்தைகளில் பினாமி வைத்து ஊழல் செய்தார். இதை மறைக்கச் செபி தலைவர்களை தன் வசப்படுத்தி வெளிநாட்டில் முதலீடு செய்தார். இது போல இப்போது சூரிய சக்தி மின்சார விவகாரத்தில் ஊழலை செய்துள்ளார்.
அதானியின் மருமகன் பேரிலுள்ள ஒரு கம்பேனி அமெரிக்காவில் இருக்கும் ஒரு கம்பேனியோடு ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதில் அதானி ரூ.2,029 கோடி ரூபாய் லஞ்சப் பணத்தை இந்திய அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதுதான் குற்றச்சாட்டு. அதனால் அதானி மற்றும் அவரது மருமகன் உட்பட 7 பேர் மீது அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அதானி லஞ்சம் கொடுக்க காரணம் ஒன்றிய மின்சார துறை மூலம் இந்தியா முழுவதும் மின் விநியோகம் செய்ய நினைப்பதுதான். அமெரிக்க நீதிமன்றம் அதானி மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் பேசிய தொலைப்பேசி உரையாடல்களை ஆதாரமாக வைத்து பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஒன்றிய அரசு எல்லா பொதுத்துறையின் பங்குகளையும் அதானியின் பினாமி நிறுவனங்களுடன் முதலீடு செய்துள்ளது. அதானி மீது எழுந்த குற்றச்சாட்டால் அதானியின் பங்குகள் ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. இதனால்தான் பொதுத்துறையான எல்.ஐ.சி.-க்கு ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டது. இதனால் இந்தியப் பொருளாதாரமும் வீழ்ச்சியைச் சந்திக்கும்.
அதானி லஞ்சப் புகார் விவகாரம் தொடர்பாகப் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, விரிவாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இதற்கிடையில் கென்யா அரசாங்கம் அதானியுடன் 769 மில்லியன் டாலர் மதிப்பில் செய்திருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. மேலும் இலங்கையில் புதிதாக ஆட்சியமைத்துள்ள இடதுசாரி அரசாங்கம் அதானியுடன் செய்திருந்த ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் முதலீடு செய்யாமல் இந்திய அரசாங்கத்தை பணயம்வைத்து லாபத்தை மட்டும் எடுத்துச் சென்றவர்தான் அதானி. உலக குற்றவாளிகள் பட்டியலில் அதானி இருப்பதற்குக் காரணம் மோடி அரசுதான் என்று எல்லோரும் குற்றம் சாட்டி வருகிறார்கள். அதானியின் சட்ட விரோத நடவடிக்கைகளை மோடி நண்பராக இருப்பதால் தடை செய்ய மாட்டார். இந்த விவகாரத்தைப் பற்றி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசுவேன் என்று சொன்னது நம்பிக்கையளிக்கும் வகையில் இருக்கிறது.
சூரிய சக்தி மின்சாரம் விவகாரத்தில் அதானி லஞ்ச கொடுத்ததாக ஆதாரத்துடன் எழுந்த புகாரையடுத்து தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதில் என்ன நிலைப்பாடு என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இந்த விவகாரத்தில் ஒப்பந்தப்படி பார்த்தால் அதானியின் நிறுவனமும் அமெரிகாவிலுள்ள நிறுவனமும் முக்கியமான நிறுவனங்கள். இந்த இரண்டு நிறுவனங்கள் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. ஒன்றிய அரசின் 100 % கட்டுப்பாட்டில் நடக்கும் இந்த இரண்டு நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தத்தில், மாநில மின்சார துறைகள் இணையலாம் இணையாமலும் இருக்கலாம். மற்ற மாநிலங்களின் மின்சார துறைகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காகத்தான் அதிகாரிகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்திருக்கிறார். கடந்த 2015 ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 686 மேகா வாட் மின்சாரம் கொடுக்க வேண்டுமென அதானியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதனால் விசாரணை என்பது பாரபட்சமின்றி நடக்க வேண்டுமென்றால் உடனடியாக ராகுல் காந்தி சொன்னதுபோல் நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைத்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.