தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் இன்று (26-11-24) அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை (27-11-24) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில், “வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்து 48 மணி நேரத்திற்குள் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். தற்போது சென்னையில் இருந்து 1000 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையியிலும், நாகையிலிருந்து 810 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. 30 கிலோமீட்டர் வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது” என தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று காலை முதலே சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இருந்து 830 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (27-11-24) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு, ‘ஃபெங்கல்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ளது.
அடுத்த 2 நாட்களில் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்பதால், சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 12 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால், சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.