கோவாவில் ஆண்டு தோறும் நடக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழா இந்தாண்டும் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 28ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் திரை பிரபலங்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குஷ்பு - சிவகார்த்திகேயன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது குஷ்புவின் பல்வேறு கேள்விகளுக்கு சிவகார்த்திகேயன் பதிலளித்தார்.
அதன் ஒரு பகுதியில், சிவகார்த்திகேயனின் வளர்ச்சி குறித்து குஷ்பு கேட்ட கேள்விக்கு, “மக்களில் ஒருவராகத் தான் நான் இருக்கிறேன். நான் ஒரு நல்ல சினிமா ரசிகன். அது தான் சினிமாவில் நுழைவதற்கு ஒரு முக்கிய பங்காக அமைந்தது. நான் தீவிர ரஜினி ரசிகன். ஆனால் எல்லா பெரிய ஹீரோ படங்களையும் முதல் இரண்டு நாட்களில் பார்த்துவிடுவேன். 2005, 2006 காலகட்டங்களில் இருந்து எந்த ஒரு படத்தையும் இப்போது வரை திருட்டு பதிப்பில் பார்த்ததில்லை. அதுதான் நான் சினிமா மேல் வைத்திருக்கும் அன்பு.
தமிழ் சினிமாவில் சின்னதிரையில் இருந்து சினிமாவிற்கு சென்றவர்கள் என யாரும் கிடையாது. எந்த வாய்ப்பு எனக்கு கொடுத்தாலும் அதில் 100 சதவித உழைப்பை போட்டேன். அதில் இருந்து கற்றுக்கொண்டு, மக்களை ரசிக்க வைக்க முயற்சித்தேன். அப்படி பண்ணும் போது தொலைக்காட்சியில் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டனர். அதையே சினிமாவிலும் செய்ய முயற்சித்தேன். சினிமா மூலம் நிறைய ஆடியன்ஸை சென்றடையும். என்னுடைய அல்டிமேட் குறிக்கோளே மக்களை ரசிக்க வைப்பதுதான்” என சிவகார்த்திகேயன் பதிலளித்தார்.