திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளில் 75 சதவீதத்தை நிறைவேற்றி விட்டது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மரப்பாலம் என்ற பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அமைச்சர் பொன்முடி, “திமுகவின் வாக்குறுதிகளை பொறுத்தவரை முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். சொன்னதை மட்டும் அல்லாமல் சொல்லாததையும் அவர் செயல்படுத்தி வருகிறார். உதாரணத்திற்கு மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்தையும் அவர் அறிவித்தார். இரண்டரை லட்சம் பெண்கள் இதனால் பயன் அடைகின்றனர். இது திமுக தேர்தல் வாக்குறுதி அல்ல.
தேர்தல் விதிமீறல்கள் குறித்து அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் கூறியிருப்பது இப்போதே அவர்கள் தோல்வியை ஒத்துக் கொண்டார்கள் என்பது ஆகும். எதிரணியினர் டெபாசிட் கூட பெற முடியாத அளவிற்கு திமுக மகத்தான வெற்றி பெறும். தேர்தல் ஆணையம் அதிமுக குறிப்பிட்டபடி திமுகவின் கைப்பாவை அல்ல; அது நடுநிலைமையுடன் தான் செயல்படுகிறது. இடைத்தேர்தல் வேட்பாளரை முதல்வர் தான் அறிவித்தார். ஒரு மாதத்திற்கு முன்பே நாங்கள் பணியை துவக்கி விட்டோம். முதல்வர் இந்த தொகுதியில் இரண்டு நாள் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதேபோன்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அவர்களும் விரைவில் பிரச்சாரத்துக்கு வர உள்ளார்." என்றார்.