அமெரிக்கத் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்(58) தனது வாழ்நாளில் 59 குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்று 50 போட்டிகளில் வெற்றி வாகை சூடியிருக்கிறார். போட்டியின் போது இவரின் பாய்ச்சலான குத்துகளால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் ஏராளம். இவர் கடைசியாக கெவின் மைக்ப்ரைட் என்பவருடன் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்பதை நிறுத்திக்கொண்டார். இதனிடையே பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து வந்த டைசன் தெலுங்கில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ என்ற படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அமெரிக்காவின் டெக்சாஸில் நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியில் மைக் டைசன் பங்கேற்றார். இதில் அவருக்கு போட்டியாக ஜேக் பால்(27) என்பவர் களமிறங்கினார். இவர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்பு யூடியூபராக அறியப்பட்டார். ஜேக் பால் தனது தொழில்முறை குத்துச்சண்டையை 2018ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 13 போட்டிகளில் பங்கேற்று 12 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார்.
மைக் டைசன் மற்றும் ஜேக் பால் இருவருக்கும் இடையான குத்துச் சண்டை போட்டிக்கு முந்தைய நாளில் இருவருக்கும் எடை சோதனை செய்யப்பட்டது. அப்போது நடந்த உரையாடலின்போது மைக் டைசன் ஜேக் பாலின் கன்னத்தில் அறைந்தார். இது அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அதன் பின்பு அங்கிருந்த பாதுகாவலர்கள் இருவரையும் பிரித்து வைத்தனர். இச்சம்பவம் இருவருக்கும் இடையேயான போட்டியின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று(16.11.2024) தொடங்கிய போட்டியில் 70 ஆயிரம் ரசிகர்கள் நேரில் பார்வையிட வந்தனர். மேலும் நெட் ஃபிளிக்ஸ் நேரலையில் லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு வந்தனர். இரண்டு நிமிட சுற்றுடன் மொத்தம் எட்டு சுற்றுகளாக நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் ஜேக் பால் 80-72 மற்றும் 79-73 என்ற புள்ளிகளில் மைக் டைசனைத் தோற்கடித்தார். இதனால் மைக் டைசன் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் அரங்கத்தை விட்டு வெளியேறினர். இருப்பினும் வெற்றிக்குப் பிறகு ஜேக் பால், மைக் டைசனால், தான் இன்ஸ்பையர் ஆனதாகவும் அவர்தான் கோட்(GOAT) என்றும் அவருடன் சண்டையிட்டதில் பெருமையாக இருந்தது என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.