ஊசி மூலம் உடலில் காற்றை செலுத்தி ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி சஞ்சீவி நகர் வாடாமல்லி தெருவில் வசித்து வந்தவர் ஆட்டோ ஓட்டுநரான குணசேகரன். திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. குணசேகரன் அதீத மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அவ்வப்போது மது அருந்திவிட்டும் கஞ்சா குடித்துவிட்டும் வீட்டிற்கு வந்து தாய் மற்றும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி வழக்கம்போல மதுபோதையில் வீட்டுக்கு வந்த குணசேகரன் தகராறு செய்துவிட்டு வீட்டில் படுத்துறங்கி உள்ளார். ஆனால் அடுத்த நாள் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குணசேகரனின் தாயார் காமாட்சியும் மனைவி சுலோச்சனாவும் புகார் அளித்தனர். அங்கு சென்ற போலீசார் குணசேகரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெளியான பிரேதப் பரிசோதனை முடிவில் குணசேகரன் தற்கொலை செய்து கொள்ளவில்லை மாறாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து குணசேகரனின் தாய் மற்றும் மனைவியிடம் போலீசார் விசாரணை செய்தபோது பல அதிர்ச்சி தகவல் வெளியானது. சம்பவ தினமான கடந்த 19ஆம் தேதி மது போதையில் தகராறு செய்துவிட்டு குணசேகரன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது உறவினர்களான திருநங்கைகள் லிபியா மற்றும் லிதன்யாஸ்ரீ ஆகிய இருவர் வீட்டுக்குள்சென்று குணசேகரன் உடலில் ஊசி மூலம் காற்றை செலுத்தி துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் கொலைக்குப் பாதுகாப்பாக குணசேகரன் தாய் காமாட்சியும், மனைவி சுலோச்சனாவும் வீட்டு வாசலில் அமர்ந்து யாரும் வராமல் பார்த்துக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். தற்கொலை எனக் கூறப்பட்ட சம்பவத்தில் மனைவி மற்றும் தாயாரின் உதவியுடன் திருநங்கைகளால் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நால்வரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.