Skip to main content

மீட்புப் பணியைத் துரிதப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

Chief Minister's order to expedite the rescue operation!

 

கோவை மாவட்ட சூலூர் விமானப் படைத் தளத்தில் இருந்து Mi- 17V5 என்ற ஹெலிகாப்டர் இன்று (08/12/2021) முற்பகல் 11.47 PM மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் மேற்கொண்டனர். இந்த நிலையில், நண்பகல் 12.20 மணிக்கு காட்டேரி மலைப்பகுதியில்  Mi- 17V5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும் பகுதிக்கு 10 கி.மீ. தொலைவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் கூறுகின்றன. 

 

இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளனர். மேலும், அப்பகுதிக்கு அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் விரைந்துள்ளனர். இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு இந்திய விமானப்படை தளபதி விவேக் ராம் சவுத்ரி விரைந்துள்ளார். 

 

ஹெலிகாப்டர் விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் நிலையில், தமிழ்நாடு மருத்துவக் குழு விரைந்துள்ளது. 

 

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "குன்னூர் அருகே முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியளிக்கிறது. மீட்புப் பணியைத் துரிதப்படுத்தவும். காயமடைந்தோருக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

இதனிடையே, சென்னையில் இருந்து இன்று (08/12/2021) மாலை 06.00 மணிக்கு விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக குன்னூர் செல்கிறார். பின்னர், மீட்புப் பணிகள் மற்றும் விபத்து நடந்த பகுதிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்கிறார். 


 

சார்ந்த செய்திகள்