![Cannabis taken by train two arrested in viluppuram](http://image.nakkheeran.in/cdn/farfuture/RRmC4otLdHR25FbAJTrm-G3hEmyc8FL0KsfMkbppuoM/1648440725/sites/default/files/inline-images/th-1_3001.jpg)
ஆந்திர, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெருமளவு விழுப்புரம் மாவட்டத்திலும் அதன் வழியாக புதுச்சேரி உட்பட பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவின்படி மாவட்ட நுண்ணறிவு தடுப்பு பிரிவு தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் நேற்று விழுப்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு சாக்கு மூட்டையுடன் ஒரு மூதாட்டி மற்றும் ஒரு நடுத்தர வயது மனிதர் ஆகிய இரண்டு பேர் இரயில் நிலைய பகுதியிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். சந்தேகத்தின் பெயரில் அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் விசாரணை செய்தனர். அதோடு அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையையும் சோதனை செய்தனர்.
அந்த மூட்டைக்குள் 40 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரையும் விழுப்புரம் போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீயிடம் தனிப்படையினர் ஒப்படைத்தனர். போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி சேர்ந்த ரமேஷ்(45) என்பதும், உத்தமம் பாளையத்தைச் சேர்ந்த சரஸ்வதி(60) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை மூட்டையில் கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், ஆந்திராவில் குறைந்த விலைக்கு கஞ்சா கிடைப்பதால் அங்கிருந்து பல ஆண்டுகளாக கஞ்சா கடத்தி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அதிக விலைக்கு விற்றுவந்தது தெரியவந்தது. ஆந்திராவில் ஒரு கிலோ கஞ்சா பத்தாயிரம் ரூபாய் விலை என்றும், இங்கு கொண்டு வந்து விற்பனை செய்தால் ஒரு கிலோ கஞ்சா ஐம்பதாயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது இதன் மூலம் நான்கு மடங்கு லாபம் கிடைப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த கடத்தல் தொழிலில் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் இருவரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். கஞ்சா கடத்தி வரும் ஏஜெண்டு மட்டும்தான் நாங்கள், எங்களைவிட இந்தத் தொழிலில் பெரிய வியாபாரிகள் ஈடுபட்டு உள்ளனர் என்றும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.