Skip to main content

“ஆட்சியாளர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஏழைகளாக உள்ளனரா?”- சரமாரி கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள்!

Published on 22/07/2021 | Edited on 22/07/2021

 

"Are the rulers and MLAs poor?"- judges questioned

 

மாற்றுத்திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புது பேருந்துகள் கொள்முதல் செய்ய  தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி, மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி,  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 10 சதவீத பேருந்துகள் மட்டும் மாற்றுத்திறனாளிகள் வசதியாக கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வசதிகளுடன் குறிப்பிட்ட பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மோசமான சாலைகளை மேம்படுத்திய பின், சட்டப்படியும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

 

"Are the rulers and MLAs poor?"- judges questioned

 

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் 58 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும், நிதி பிரச்னை உள்ளதால் தற்போது 10 சதவீத பேருந்துகள் மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கொள்முதல் செய்யப்படுவதாகவும், கரோனா பாதிப்பு உள்ளதாகவும், இந்தியா ஏழை நாடு எனவும் தெரிவித்தார். இதையடுத்து, “ஆட்சியாளர்கள் ஏழைகளாக உள்ளனரா? எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஏழைகள்?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தையும், அதன்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைகளையும் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

 

மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தடை விதித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்