பிரபல யூடியூபர் இர்பான் தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தைத் துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து சமீபத்தில் கண்டறிந்துள்ளார். இதனையடுத்து தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் இதுதான் என்று அவரது யூடியூப் சேனலில் அறிவித்திருந்தார். அந்த வீடியோவை சுமார் 20 லட்சம் பேர் பார்த்திருந்தனர். இத்தகைய சூழலில் தான் குழந்தையின் பாலினத்தைப் பகிரங்கமாக அறிவித்த இர்ஃபானுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த இர்பான் மீது சுகாதாரத்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
அதே சமயம் பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து வெளியில் சொல்பவர்கள் மீது தமிழகத்தில் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது என்ற நிலையில் இர்பானுக்கு மேலும் சிக்கல் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் இர்பான் விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளது. அதில், “யூடியூபர் இர்பான் துபாய் சென்ற போது தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைப் பெண் என்று ஸ்கேன் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டுள்ளார். அதனை குடும்ப நிகழ்ச்சி ஒன்றின் போது அங்கு குழுமியிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வினை ஒளிப்படமாக எடுத்து கடந்த 19 ஆம் தேதி (19.05.2024) அன்று தனது யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டுள்ளார். அதனை பல பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பார்த்தும் பகிர்ந்தும் உள்ளனர்.
இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994 (PCPNDT ACT 1994) (Central Act 57 of 1994) இன் படி தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயலால், தமிழ்நாடு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகும் வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநில அமலாக்க அலுவலர் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மூலம் இர்பானுக்கு நேற்று (21.05.2024) அன்று பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காகக் குறிப்பானைச் சார்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இர்பான் மூலம் இது தொடர்பாக வெளியிடப்பட்ட யூடியூப் வீடியோவினை சமூக வலைத்தளங்களிலிருந்து உடனடியாக நீக்கிட யூடியூப் தளத்திற்கும், கணினி குற்றம் (Cyber Crime)பிரிவிற்கும் மே 21 ஆம் தேதி (21.05.2024) நாளிட்ட கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் ஸ்கேன் சென்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.