Skip to main content

விஜய் சேதுபதியை சந்தித்த பிரபல பாலிவுட் இயக்குநர்

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
ram gopal varma meets vijay sethupathi

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் ராம் கோபால் வர்மா. இவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிடுவது மற்றும் நிகழ்ச்சிகளில் நடந்துகொள்வது அவ்வப்போது சர்ச்சைகளாக மாறி வருவது வழக்கமாக இருக்கிறது. இவர் தமிழில் மணிரத்னம் இயக்கியய திருடா திருடா படத்தில், மணிரத்னத்துடன் இணைந்து கதை எழுதியுள்ளார். மேலும் சூர்யாவை வைத்து ரத்த சரித்திரம் படத்தை இயக்கியிருந்தார்.   

இந்த நிலையில் ராம் கோபால் வர்மா விஜய் சேதுபதியை திடீரென நேரில் சந்தித்துள்ளார். சென்னையில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பு சில தினங்களுக்கு முன்பு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ராம் கோபால் வர்மா இன்று தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், “திரையில் பலமுறை விஜய் சேதுபதியை பார்த்த நான், இறுதியாக நேரில் பார்த்தேன். திரையில் பார்த்ததைவிட நேரில் அவர் இன்னும் சிறந்த மனிதர் என உணர்ந்தேன்” என்றார். 

ram gopal varma meets vijay sethupathi

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, இந்தியிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஃபார்ஸி வெப் சீரிஸ் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். பின்பு மாநகரம் இந்தி ரீமெக்கான மும்பைக்கார், ஷாருக்கானின் ஜவான், ஸ்ரீ ராம் ராகவன் இயக்கத்தில் மெரி கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து படங்களில் நடித்திருந்தார். இப்போது தமிழில், வெற்றிமாறனின் விடுதலை 2, மிஷ்கினின் ட்ரெயின் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் அவரது 50வது படமான மகராஜா, ஆறுமுகக் குமார் இயக்கத்தில்  ‘ஏஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடரில் நடித்து வந்தார். அது தற்போது கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்