மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், முறையற்ற ஜி.எஸ்.டி வரி போன்றவற்றால் தொழில்கள் நசிவு, தொழிலாளர்கள் வேலையிழப்பு போன்றவற்றை கண்டித்து இடதுசாரிகள், காங்கிரஸ், திமுக என அனைத்து மாநில தொழிற்சங்கங்களும் ஜனவரி 8ந்தேதி பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தன. அதனை பல மாநிலத்தில் உள்ள எதிர்கட்சிகள் ஏற்றுக்கொண்ட நிலையில் சில மாநிலங்களில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.
![dmk and Congress protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/yPtfYa0UDCX9dJoC2VVJbqPTqbr4Xp2lmkROA338g98/1578585591/sites/default/files/inline-images/11111_22.jpg)
இதனால் ஜனவரி 8ந்தேதி நடைபெற்ற பொதுவேலை நிறுத்தம் பிசுபிசுத்தது. பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள் உட்பட வாகனங்கள் 80 சதவிதம் வழக்கம் போல் இயங்கின. கடைகள் திறந்து இருந்தன. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பெரும்பாலும் இந்த பொது வேலை நிறுத்தத்தில் கலந்துக்கொள்ளவில்லை.
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், விசிக என பல கட்சிகளும் இந்த பொதுநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து மத்திய மாநில அரசுகளை எதிர்த்து நடந்த ஊர்வலத்தில் அக்கட்சிகளின் தொழிற்சங்கங்கள் கலந்துக்கொண்டு தங்களது கண்டன குரல்களை எழுப்பி, கைதாகின. இருந்தும் பெரியளவில் வெற்றி பெறாததுக்கு காரணம், தொடர்ச்சியாக மத்தியரசை கண்டித்து குடியுரிமை திருத்த சட்டம், மக்கள் கணக்கெடுப்பு சட்டம் போன்றவற்றுக்காக எதிர்கட்சிகள் போராடியுள்ளன.
இதனால் பல தரப்பிலும் சிறு குறு தொழில்கள் பாதிப்புகள் உள்ளன. அதோடு பொங்கல் பண்டிகை வருகிறது, தமிழகத்தில் பொங்கல், ஆந்திரா – தெலுங்கானாவில் சங்கரந்தி என ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பெயரில் கொண்டாட்டம் தொடங்கவுள்ளது. வியாபார நேரம். இந்நிலையில் பொதுவேலை நிறுத்தம் செய்தால் பாதிப்பு என்பதால் இந்த பொது வேலை நிறுத்தத்தில் கட்சிகள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.
இதனை அறிந்தே நாடு முழுவதும் 12 முதல் 12.10 வரை வாகனங்களை இயக்காமல் நிறுத்தி பொதுவேலை நிறுத்தத்துக்கு பொதுமக்கள் ஒத்தொழைப்பு தர வேண்டும் என போராட்ட ஒருங்கிணைந்த அமைப்புக்குழு வேண்டுக்கோள் விடுத்தது. அதன்படி இந்தியாவில் 90 சதவிகித இடங்களில் அந்த நேரத்தில் வாகனங்கள் இயக்காமல் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலை நகரில் மத்திய பேருந்து நிலையம் அருகே இடதுசாரி கட்சிகள், திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக போன்ற கட்சிகளின் தொழிற்சங்களின் சார்பில் ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டு 12 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மத்தியில் ஆளும் பாஜக அரசையும், மாநிலத்தை ஆளும் அதிமுக அரசுகளை கண்டித்து குரல் எழுப்பி ஊர்வலம் சென்றவர்களை போலீஸார் மடக்கி கைது செய்தனர்.
வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், எல்.ஐ.சி, தபால் நிலையம், மத்திய மாநில அரசுகளின் பெல் நிறுவனம் உட்பட பல தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்கள், ஊழியர்கள் செல்லாததால் அந்த செக்டார் 80 சதவிகிதம் பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசாங்கத்துக்கு பல்லாயிரம் கோடி நட்டம் என்பதும் குறிப்பிடதக்கது.