கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம்-செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி மர்மமான முறையில் மாடியில் இருந்து விழுந்து மரணம் அடைந்தார். ஸ்ரீமதி வழக்கு என தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், இந்த வழக்கில் ஸ்ரீமதியின் தாயார் தரப்பில் வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜராகியுள்ளார்.
இந்நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் தன்னுடைய மகளின் மரணம் குறித்து அவதூறாக பேசியதாக ஸ்ரீமதியின் தாயார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த செல்வி, ''சவுக்கு சங்கர் மேல புகார் கொடுக்க வந்திருக்கிறோம். எதற்கு என்றால் ஆரம்பத்தில் எல்லாருக்குமே தெரியும் பாப்பாவை (ஸ்ரீமதி) பள்ளி தரப்புதான் கொலை செய்திருந்தார்கள். அந்த பள்ளிக்கூடத்தில் பிரின்ஸ்பால் ரூமில் எவ்வளவோ காண்டம்ஸ் இருந்தது. எல்லாம் வெளிநாட்டு காண்டம். அதற்கு இதுவரைக்கும் காவல்துறை எந்தவித விசாரணையும் பண்ணவில்லை. ஒரு பள்ளிக்கு வெளிநாட்டு காண்டம் ஏன் வந்தது? எதற்கு வந்தது? என்ற காரணம் இந்த நாள் வரைக்கும் தெரியவில்லை.
ஸ்ரீமதியை பாலியல் வன்கொடுமை செய்துதான் கொலை செய்தார்கள் என்பது எங்களுடைய குற்றச்சாட்டாக இருக்கிறது. ஸ்ரீமதி 17 வயதுக்கு உட்பட்டவர். அதற்கு போக்சோ வழக்குதான் பதிவு செய்ய வேண்டும். ஆனால் காவல்துறை போக்சோ வழக்கும் பதிவு செய்யாமல் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார்கள். இப்பொழுது பள்ளிக்கூடத்தில் இருந்த காண்டம்ஸ், இவங்க மேல் இருக்கக்கூடிய தப்பையெல்லாம் மறைக்க வேண்டும் என்பதற்காக சவுக்கு சங்கரை விலை கொடுத்து வாங்கி பள்ளி நிர்வாகம் என்னை பற்றியும், என் பொண்ணைப் பற்றியும் பல அவதூறுகளை பரப்பி எத்தனையோ சேனலில் சவுக்கு சங்கர் பேட்டி கொடுத்திருந்தார்.
மக்கள் யாருமே சவுக்கு சங்கரை நம்பவில்லை. ஸ்ரீ மதியை பற்றி அவதூறாக பேசும்போதும் சரி, என்னை பற்றி அவதூறாக பேசும்போதும் சரி நீ பணம் வாங்கிக் கொண்டுதான் பேசுற என்கின்ற குற்றச்சாட்டை சவுக்கு சங்கர் மேல் வைத்தார்கள். ஆனால் அதற்கான ஆதாரம் இருக்கா என்று பார்த்தால் நம்மிடம் இவ்வளவு நாள் ஆதாரம் இல்லாமல் இருந்தது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் சவுக்கு சங்கருடைய உதவியாளராக இருந்த பிரதீப் என்ற நபர் பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில் சவுக்கு சங்கர் கள்ளக்குறிச்சி வழக்கில் பணம் வாங்கிக் கொண்டுதான் பேசினார் என்ற உண்மையை சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறார். காவல்துறை ஸ்ரீமதி வழக்கு என்றாலே ஒருதலைப்பட்சமான விசாரணை செய்கிறார்கள். யாராவது ஒரு சில யூடியூபர்கள் தனக்கு தெரிந்த உண்மையை இப்படி எல்லாம் இருக்கலாம் என்று சொல்கின்ற ஒவ்வொரு வீடியோவும் தேடிப் போய் டெலிட் செய்கிறார்கள்'' என்றார்.