Skip to main content

“பாஜக ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல்...” - ராகுல் காந்தி எம்.பி.!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
 "Biggest coal scam in BJP regime..." - Rahul Gandhi MP!

இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்தது கடந்த ஆண்டு அம்பலமாகி இருந்தது. இந்த ஊழல் குறித்து இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பைனான்ஸ் டைம்ஸ் என்ற இதழ் இந்த ஊழலை அம்பலப்படுத்தி இருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி ஊழலில் அதானி நிறுவனம் ஈடுபட்டு வருவதாக பைனான்ஸ் டைம்ஸ் இதழ் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது. மேலும் இந்தோனேசியாவில் வாங்கப்படும் நிலக்கரி இந்தியாவிற்கு வந்து சேரும் போது 3 மடங்கு விலை உயர்த்தப்படுகிறது என அந்த இதழ் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக வெளியான செய்தியை குறிப்பிட்டு ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “பாஜக ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல வருடங்களாக நடந்து வரும் இந்த மோசடி மூலம் மோடியின் அபிமான நண்பர் அதானி மூன்று மடங்கு விலைக்கு குறைந்த தர நிலக்கரியை விற்று பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளார். அமலாக்கத்துறை (ED), சிபிஐ (CBI) மற்றும் வருமானவரித்துறை (IT) போன்ற விசாரணை அமைப்புகள் இந்த வெளிப்படையான ஊழலில் அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பிரதமர் மோடி சொல்வாரா?. ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு இந்த மெகா ஊழலை இந்திய அரசு விசாரித்து, பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு காட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 "Biggest coal scam in BJP regime..." - Rahul Gandhi MP!

முன்னதாக கடந்த அதிமுக ஆட்சியில் இந்தோனேசியாவில் இருந்து வாங்கிய நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 3 மடங்கு விலை அதிகமாக வைத்து அதானி நிறுவனம் விற்றதும் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. அதாவது இந்தோனேசியாவில் இருந்து அதானி நிறுவனம் மூலம் 24 கப்பல்களில் நிலக்கரி கொண்டு வரப்பட்டு இறக்குமதி செய்த ஒட்டுமொத்த நிலக்கரியும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கே விற்பனை செய்யப்பட்டுள்ள தகவலும் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்