முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு 2 வது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்க வேண்டும் எனக் கார்நாடக மாநில சிறப்பு புலானாய்வுக் குழு (S.I.T) கோரிக்கை வைத்திருந்த நிலையில், ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. அதன்படி, பிரஜ்வல் ரேவண்ணாவைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் குமாரசாமி பெங்களூரில் நேற்று (20-05-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “எங்கள் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுகின்றன. எனக்கு தெரியும். என்னைச் சுற்றியிருந்தவர்களின் நாற்பது போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. தொலைபேசியில் என்ன விவாதங்கள் நடந்தாலும் கண்காணிக்கப்படுகிறது. எச்.டி.ரேவண்ணாவின் தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்படுகிறது.
பிரஜ்வல் ரேவண்ணா இந்தியாவுக்கு திரும்பி வந்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இந்த ‘போலீஸ் மற்றும் திருடன்’ விளையாட்டு இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்? நீங்கள் அரசியலில் வளர வேண்டும் என்று உங்கள் தாத்தா எப்போதும் விரும்பினார். அவருடைய நற்பெயரை நீங்கள் மதிக்க விரும்பினால், இந்தியாவுக்குத் திரும்பி வர வேண்டும். நமது குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்றுங்கள். சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைக்க வேண்டும். நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், ஏன் பயம்?.
மன வேதனையைக் கடந்து செல்லும் எனது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் மீண்டும் ஒருமுறை பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் வேதனை எனக்குப் புரிகிறது. இதுபோன்ற பல வழக்குகள் நடந்துள்ளன என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். இத்தகைய நிகழ்வுகளின் தீவிரம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். இது ஏற்றுக்கொள்ள முடியாத வழக்கு, வெட்கித் தலைகுனிய வைக்கிறது” என்று கூறினார்.