விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க., தாமரை எழுச்சி விழா என்ற பெயரில் மாநாடு ஒன்றை விருதுநகரில் நடத்தியது. “நாங்களெல்லாம் தேச பக்தர்கள். பா.ஜ.க.வை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள்..” என்று அம்மாநாட்டில் பேசிய அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன் வெளிப்படுத்திய தேசபக்தி கண்டு, தாமரைக் கட்சியினர் மெய் சிலிர்த்தனர்.
அப்படியென்ன பேசிவிட்டார் ஸ்ரீனிவாசன்? “கிழக்கு பார்த்து உட்கார்ந்தால் எல்லாம் சரியாகிவிடும். நீங்க ஆட்சிக்கு வந்துருவீங்கன்னு யாரோ சொல்லிக் கொடுத்ததை, கிராமசபைக் கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் தவறாமல் கடைப்பிடிக்கிறார். அவருக்கு ஜாதகம் சரியில்லை. அவருடைய ஜாதகத்தில் நிறைய பாவ கிரகங்கள் இருக்கிறதாம். ஜாதகம் தெரிந்த பலருக்கும் தெரிந்த விஷயத்தைச் சொல்கிறேன். ஸ்டாலின் ஜாதகத்தில் ஏழாம் இடத்திலிருந்து வைகோ பார்க்கிறார். எட்டாம் இடத்திலிருந்து திருமாவளவன் பார்க்கிறார். ஏழில் வைகோ, எட்டில் திருமாவளவன்.. இந்த ஜாதகத்தில் ராகு – கேதுவுக்கு சொந்த வீடு கிடையாது. ஏதாவது ஒரு கிரகத்தில் போய் உட்கார்ந்துகொள்ளும். அதுபோல், தமிழகத்தில் இரண்டு கிரகங்களுக்கு சொந்த வீடே கிடையாது. வடது, இலது கம்யூனிஸ்ட் கட்சிகளான இரண்டு கிரகங்களும் திமுக மேல் உட்கார்ந்திருக்கிறது. இத்தனை பாவ கிரகங்கள் ஒன்றாகச் சேர்ந்தால் அந்த ஜாதகம் எப்படி உருப்படும்?
தமிழ்நாட்டில் நடக்கும் பா.ஜ.க. மாநாடுகளில் ஒரு தீர்மானம் போடவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டில் திமுக தோற்று, தாமரை மலர வேண்டுமென்றால், பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு வந்தால் போதாது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரச்சாரத்திற்கு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்படி ஒரு ராசியான தலைவர். காங்கிரஸின் கதையை முடித்துவிட்டார். அமித்ஷா சொன்னது போல், தென்னிந்தியாவில் முதல் முறையாக நடக்கப்போகிறது. காங்கிரஸ் இல்லாத தென்னிந்தியா உருவாகிக் கொண்டிருக்கிறது.
ஸ்டாலின் வெற்றிபெற வேண்டுமென்று அவரை அழைத்து, கிறிஸ்தவ தேவாலயங்களில் பிரார்த்தனை செய்து, ஸ்தோத்திரம் சொல்லச் சொன்னால், அவர் ‘தோத்திருவோம்’ என்று சொல்கிறார். ‘தடுப்பூசியை முதலில் மோடி போட்டுவிட்டு, பிறகு மற்றவர்களுக்குப் போட்டிருக்க வேண்டும்.’ என்று பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார் தயாநிதி மாறன். அதற்கு நமது எம்.பி.கூட பதில் சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியாக இருந்திருந்தால், முதலில் தங்களின் குடும்பத்தினருக்கு போட்டுவிட்டுத்தான், பிறகு மற்றவர்களுக்கு போடுவார்கள். இதெல்லாம் திமுகவினருக்கு புரியாது. நான் கேட்கிறேன். 1970-ல் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் கொண்டு வந்தபோது, திமுக தலைவர்கள் முதலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்களா? அப்படி செய்திருந்தால், தயாநிதி மாறன் பாராளுமன்றத்தில் பேசியதை சரியென்று ஒத்துக்கொள்ளலாம்.” என்றெல்லாம், கண்ணியத்தைக் காற்றில் பறக்கவிட்டு பேசினார்.
தேசபக்தர்களான பா.ஜ.க.வினர், மாநில பொதுச் செயலாளரின் வாயிலிருந்து, வார்த்தைக்கு வார்த்தை பீறிட்ட தேசபக்தியைப் பார்த்து, ஆரவாரம் செய்தனர்.