கடல் என்பது மீனவர்களுக்கு மட்டும் சொந்தமல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சகோதரி மகள் திருமண நிச்சயதார்த்த விழா சிவகங்கையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சீமான் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். அப்போது தன்னை அறியாமல் கண் கலங்கினார். இதனைக் கண்ட சீமானின் சகோதரி அவரைத் தேற்றினார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ‘கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் வைப்பது குறித்து முதல்வர் யோசிக்க வேண்டும். அதனால் கடல் வளம், மீன் வளம் பாதிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது’ என அறிக்கை விட்டுள்ளார். அந்த கருத்தை நான் ஏற்கிறேன். வரவேற்கிறேன்.
சின்னம் வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. வங்கக்கடல் கட்சிக்கோ கட்சியின் தலைமைக்கோ சொந்தமானது அல்ல. அது மீனவர்களுக்கும் சொந்தமானது அல்ல. மீனவர்களுக்கு வாழ்விடம் இருக்கிறது. வாழ்வாதாரம் இருக்கிறது அவ்வளவுதான். கடல் பொதுச் சொத்து. அதை அப்படி பயன்படுத்திக்கொண்டு போகக்கூடாது. கடற்கரையில் அடக்கம் செய்தார்கள் என்பது பேரறிஞர் அண்ணா மீது இருந்த நன்மதிப்பினால் அழுது கொண்டே அதை விட்டுவிட்டார்கள். 2 ஏக்கராக எடுத்து 8 ஏக்கர் காலி செய்துவிட்டார்கள். கடலை தொட அனுமதிக்க முடியாது” என்றார்.