நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (25.11.2024) காலை 11 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில், வக்பு சட்ட திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட 16 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பத் தயாராகி வருகின்றனர். இதனையொட்டி இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேசுகிறார். அப்போது நாடாளுமன்ற இரு அவைகளையும் சுமுகமாக நடத்த எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ் நோட்டீஸ் அளித்துள்ளார். அதில் கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசிடம் சிறப்பு நிதி உதவி அளிக்க வேண்டும் என கோரியுள்ளார். அதே சமயம் கெளதம் அதானி மீதான குற்றப்பத்திரிகை விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்கக் காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஈடன் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். அதில், “இந்தியாவின் ஜனநாயக மற்றும் பொருளாதார ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். எவ்வித சார்பும் அற்ற விசாரணைகளை உறுதிப்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
ஐதராபாத் தொகுதி எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி, உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் நேற்று (24.11.2024) போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். மேலும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். கவுதம் அதானி மீதான குற்றப்பத்திரிகை விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரினார். அதில், “இந்த விஷயத்தில் மோடி அரசின் மௌனம் இந்தியாவின் ஒருமைப்பாடு, பொருளாதாரம் மற்றும் உலகளாவிய நற்பெயரைக் குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்துகிறது. அதானியின் ஊழல் குறித்த கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும்” என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.