தமிழகத்தில் நடந்து முடிந்த 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியானது. அதில் இந்திய அளவில் மத்தியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனவும், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக மக்களவை தொகுதிகளை கைப்பற்றும் , அதிமுக கூட்டணி குறைவான மக்களவை தொகுதிகளை கைப்பற்றும் என நியூஸ்18 தொலைக்காட்சி, டைம்ஸ் நவ், இந்தியா டுடே, சி வோட்டர் உட்பட அனைத்து முன்னணி செய்தி நிறுவனங்களும் தங்களது கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் நடந்த திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, பூந்தமல்லி, உள்ளிட்ட 22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகவில்லை.
ஏற்கனவே தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிமுக. இருப்பினும் அந்த கணிப்பு முடிவுகளை உதாரணமாக வைத்து பார்க்கும் போது அதிமுக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுமா? என்ற கேள்வி அக்கட்சியினரிடையே எழுகிறது. அதே போல் மே-23 ஆம் தேதி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் மத்தியில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் திமுக கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன் வந்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுமா? தமிழகத்தில் எழும் இந்த கேள்விகள் அனைத்திற்கும் வாக்கு எண்ணிக்கை அன்று முடிவுகள் வெளியாகும். அதுவே மக்கள் அளித்துள்ள இறுதி தீர்ப்பு ஆகும்.